சாத்தூரில் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

சாத்தூரில் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து - இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

சாத்தூர்: சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே உள்ள சின்னகொல்லப்பட்டியில் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பயன்பாடு இல்லாத மோட்டார் அறை இன்று அதிகாலை வெடி விபத்தில் இடிந்து விழுந்தது. இது பற்றி தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த அறையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், தயரிப்பின் போது ஏற்பட்ட உராய்வில் வெடி விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

அதையடுத்து, இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளார்களா என ஜேசிபி இயந்திரம் மூலம் போலீஸார் இடிபாடுகளை அகற்றினர். அப்போது, வெடி விபத்து ஏற்பட்ட மோட்டார் அறையை சுற்றிலும் சதை பகுதிகள் ரத்தத்துடன் சிதறிக் கிடந்தன. இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 200 மீட்டர் தூரத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதறி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்த முத்து ராஜ் என்பவரது மகன் அஜித் ( 23 ) என்பது தெரியவந்துள்ளது. இவர் காட்டுப் பகுதியில் பயன்பாடு இல்லாத மோட்டர் அறையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததும், நேற்று அதிகாலை பட்டாசு தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப் பட்டது குறித்தும் சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in