Published : 28 Feb 2018 07:54 AM
Last Updated : 28 Feb 2018 07:54 AM

பணத்துக்கு விலைபோகும் நபர்களுக்கு வாக்குச்சாவடி குழுவில் இடம் தரக்கூடாது: திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

எதிர்க்கட்சிகளிடம் பணத்துக்கு விலைபோகும் நபர்கள் யாரும் வாக்குச்சாவடி குழுவில் இடம்பெறக் கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடந்துவரும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். . 14-வது நாளாக நேற்று காலையில் மதுரை வடக்கு, மாலையில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மூன்று அமர்வுகளாக ஆய்வு நடத்தினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், ‘‘2019-ல் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து எப்போது வேண்டுமானாலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாம். உள்ளாட்சித் தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதில் 5 பேர் பெண்கள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினரும் குழுவில் இருக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்குச்சாவடி குழுவில் யார் யாரையோ நியமித்ததால் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளிடம் விலைபோய் விட்டனர். அதனால், அங்கு மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனவே, பணத்துக்கு விலைபோகும் நபர்களை வாக்குச்சாவடி குழுவில் நியமிக்கக் கூடாது. அப்படி போலியான நபர்கள் குழுவில் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எப்போது தேர்தல் வந்தாலும் திமுக வென்று ஆட்சி அமைப்பது உறுதி. திமுக நிர்வாகிகளான உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. எனவே, நம்பிக்கையுடன் கட்சிப் பணியாற்றுங்கள்’’ என ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x