Published : 17 Feb 2018 09:22 AM
Last Updated : 17 Feb 2018 09:22 AM

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் மக்களுக்கான உள்கட்டமைப்பு பணிகளும், நலத்திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். சென்னை ஆவடியில் உள்ள ராணுவ உடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூட மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தமிழக மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

வெள்ளை அறிக்கை

கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்தி 42 ஆயிரத்து 160 கோடி முதலீடு கிடைத்துள்ளதாகவும் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் என தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த முதலீடுகள் தமிழகத்துக்கு இதுவரை வந்ததாகவோ,வேலைவாய்ப்புகள் உருவானதாகவோ தெரியவில்லை. எனவே, இந்த மாநாடு மூலம் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் குறித்து முதல்வர் கே.பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மின் வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்துவிட்டது. இதற்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உட்பட மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x