கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் இதுவரை, இறந்தவருடன் 15 பேரை வழக்கில் சேர்த்துள்ள நிலையில் 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஒருவர்பின் ஒருவராக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது அசாருதீன், முகமது இர்தியாஸ் ஆகிய இருவர் மீதும் என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
