Published : 25 Jan 2024 10:26 AM
Last Updated : 25 Jan 2024 10:26 AM

ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் சேவை - நிறைவேறியது 20 ஆண்டு கோரிக்கை

ஈரோடு: தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஈரோட்டில் நேற்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, வள்ளியூர், நாங்குநேரி, நாகர்கோவில், கன்னியாகுமரி, அம்பா சமுத்திரம், கடையம், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். தங்களது ஊரில் நடக்கும் விழாக்கள், தொடர் விடுமுறை நாட்கள் உள்ளிட்ட நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து சேவையை இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல, கோவை - நாகர்கோவில், ஈரோடு - திருநெல்வேலி,மைசூர் -தூத்துக்குடி ஆகிய ரயில்கள் மட்டுமே உள்ளன. தென்காசிக்கு செல்ல நேரடியாக ரயில் மற்றும் பேருந்து சேவை இல்லாததால், திருநெல்வேலி சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் ( வண்டி எண் 16845 ) தினமும் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, இரவு 9 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலை செங்கோட்டை வரை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த இந்த கோரிக்கைக்கு தீர்வு கிடைப்பது போல், இந்த ரயில் சேவை செங்கோட்டை வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ரயிலானது ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு கிளம்பி திருநெல்வேலிக்கு இரவு 8.50-க்கு சென்றடையும்.

பின்னர் 8:55 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர் சத்திரம் வழியாக இரவு 10.10 மணிக்கு தென்காசிக்கு செல்கிறது. அங்கிருந்து 11 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறு மார்க்கமாக செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் திருநெல்வேலிக்கு காலை 6.25 மணிக்கு வந்து சேரும். 6.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பி, ஈரோட்டிற்கு 3 மணிக்கு வந்தடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x