Published : 25 Jan 2024 06:30 AM
Last Updated : 25 Jan 2024 06:30 AM
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்-அப் மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டு பெறுவதற்கானபுதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு விற்பனை செய்யும் கவுன்ட்டர்களில் பயணச் சீட்டுவாங்கும் பயணிகள், மின்னணுபயணச் சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, கவுன்ட்டர்களில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இந்த வசதியை அறிமுகப்படுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் பயணிகள் எளிய வகையில் பயணச் சீட்டுகளை பெறுவதற்காகவும், காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், டிஜிட்டல்முறைகளை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள ‘க்யூஆர்’ குறியீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல்‘க்யூஆர்’ பயணச் சீட்டுகளை பெறுதல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல்ஆப் மூலம் ‘க்யூஆர்’ பயணச்சீட்டுகளை பெறுதல், வாட்ஸ்-அப், பேடிஎம், போன்பே, மூலம் ‘க்யூஆர்’ பயணச்சீட்டுகளை பெறுதல் என பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திஉள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மெட்ரோரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்ட்டர்களில் வாட்ஸ்-அப் மூலம்‘க்யூஆர்’ பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை கோயம்பேடு மற்றும் விமான நிலையம் ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் முதலில் பரிசோதிக்கப்பட்டு, இது பயணிகளின் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில், பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைகவுன்ட்டரில் உள்ளீடுவதற்கானவசதி அமைக்கப்பட்டுள்ளது.பயணிகள் மொபைல் எண்ணை உள்ளிட்டதும், வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு நேரடியாக அவர்களது மொபைலுக்கு அனுப்பப்படும். இப்பரிவர்த்தனை பாதுகாப்பானது. பயணிகளின் செல்போன்எண்கள் சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்தின் அமைப்பில்சேமிக்கப்படவில்லை. இதன் மூலம், பயணிகளின் தனியுரிமை உறுதி செய்யப்படுகிறது.
வாட்ஸ்-அப் மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டுகளை பெற, சேருமிடம்மற்றும் பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை குறித்து பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்ட்டரில் நிறுவப்பட்டுள்ள கீபேட்மூலம் தங்கள் வாட்ஸ்அப் எண்ணைபதிவு செய்ய வேண்டும். பின்னர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப்புக்கு உங்கள் பயணச்சீட்டு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ பயணச் சீட்டை பெறலாம். இவ்வாறு சித்திக் கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஆலோசகர் கே.ஏ.மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்) உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT