Published : 25 Jan 2024 06:08 AM
Last Updated : 25 Jan 2024 06:08 AM

ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 என மூன்று பிரிவு: கிண்டி கலைஞர் மருத்துவமனையில் கட்டண வார்டுகள் ஜன.31-ம் தேதி திறப்பு

சென்னை: சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்புமருத்துவமனையை கடந்த ஜூன்15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மொத்தம் 4.89ஏக்கர் பரப்பில் தரைதளம் மற்றும்ஆறு தளங்களுடன், மூன்று கட்டிடங்களாக கட்டப்பட்ட மருத்துவமனையில், சிறுநீரகவியல், சிறுநீர் பாதையியல், இதயவியல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகின்றன. இதயவியல், சிறுநீரகம்உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கட்டண படுக்கை வசதி திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறியதாவது: மருத்துவமனையில், காய்ச்சல், விபத்துகள் என அனைத்துக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாருக்கும் எவ்வித சிகிச்சையும் மறுப்பதில்லை.

பொதுமக்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறோம்.சில நோயாளிகளுக்கு, அருகில்இருக்கும் நோயாளிகளுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும்.இதனால், மனதளவிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான நோயாளிக்கு, குறைந்த கட்டணத்தில் தனி அறையுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதில், ‘ஏசி, டிவி, ஆக்சிஜன்’ போன்ற வசதிகள் இருக்கும். அத்துடன், குறிப்பிட்ட அறைகளுக்கு, செவிலியர்கள், மருத்துவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பணியமர்த்தப்படுவர். ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 என்ற மூன்று விதமான கட்டண முறைகள் வரும் 31-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இதற்காக, 70 படுக்கைகள் தயாராக உள்ளன. இத்திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோல், 10 அறுவை சிகிச்சை அரங்குகளும் செயல்பாட்டுக்கு வரவுள்ளன என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x