Published : 25 Jan 2024 05:45 AM
Last Updated : 25 Jan 2024 05:45 AM

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர், மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்து வருகிறார்.

ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக ஜன.26-ம் தேதி அவர் அளிக்கும்தேநீர் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறோம்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியல் அமைப்புக்கு விரோதமாக செயல்படுகிறார். கூட்டாட்சிக்கு விரோதமாக இருந்து வருகிறார். எனவே அவருடைய தேநீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் புரட்டி பேசுவதும், மகாத்மா காந்திகுறித்து அவதூறு பரப்புவதுமாக மலிவாக செயல்படும் ஆர்.என்.ரவியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x