Published : 23 Feb 2018 09:01 PM
Last Updated : 23 Feb 2018 09:01 PM

கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா தொடங்கியது: இந்திய-இலங்கை பக்தர்கள் குவிந்தனர்

 

கச்சத்தீவில் இந்திய-இலங்கை பக்தர்கள் கொண்டாடும் புனித அந்தோணியார் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியை சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவகாலத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது.

இந்தியா–இலங்கை இரு நாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் தொடங்கியது. கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் அந்தோணியார் கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். நெடுந்தீவு பங்குத்தந்தை எமில் பவுல், ராமேசுவரம் பங்குத் தந்தை அந்தோணிச் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழகத்திலிருந்து பங்கேற்பதற்காக 2,103 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்தே கச்சத்தீவு செல்ல ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் தமிழக பக்தர்கள் குவிந்தனர். கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்திவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டைகளும், மீன்வளத்துறையின் சார்பாக கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கச்சத்தீவு செல்லும் ஒவ்வொருவருக்கும் 'லைஃப் ஜாக்கெட்' வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் வருவாய், காவல்துறை அதிகாரிகள், சுங்க இலாகாவினர் பயணிகளை சோதனை செய்தனர். உணவுப் பண்டங்கள், சிறிதளவு பணம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மது, சிகரெட் மற்றும் போதை பொருட்களும் பிளாஸ்டிக் பொருட்களும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. சோதனைக்கு 62 விசைப்படகுகளில் 1,532 ஆண்கள், பெண்கள் 336, குழந்தைகள் 52 பேர் என 1,920 பயணிகள் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர்.

கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படையின் கப்பல், கடலோர காவல் படையின் ஹோவர் கிராஃப்ட் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையின் கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு 40 அடி உயரமுள்ள தேக்குக் கொடிமரம் மற்றும் சுமார் 4 அடி உயரம் உடைய புனித அந்தோணியார் சிலையும் நற்கருணை ஆசீர் வழங்கக்கூடிய கதிர் பாத்திரமும் காணிக்கையாக வழங்கப்பட்டது. மேலும் மேலும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் இலங்கை கடற்படை சார்பாக ஆராதனை மேடை ஒன்றும் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

சனிக்கிழமை காலையில் சிறப்பு திருப்பலி பூஜையும், அந்தோணியார் தேர்பவனியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு அதிகளவில் இலங்கையிலிருந்து சிங்கள பக்தர்கள் கலந்து கொள்வதால் சிங்கள மொழியில் முதன்முறையாக திருப்பலி நடத்தப்படுகிறது. சிங்கள திருப்பலியினை காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே நடத்துகிறார். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும். அதனைத் தொடர்ந்து இரு நாட்டினரும் அவரவர் நாடு திரும்புவார்கள்.

2017ம் ஆண்டு மார்ச் 11, 12 ஆகிய நாட்களில் நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவை தங்கச்சிமடத்தைச் சார்ந்த பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக மீனவர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x