

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்தாமலும், அவர்களுக்கு அளிக்க வேண்டிய கையுறை, முகக் கவசம், காலணி உள்ளிட்டவைகளை வழங்காமலும் ஒப்பந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
21 வார்டுகளைக் கொண்ட கள்ளக்குறிச்சி நகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கிரீன் வாரியார் எனும் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் 142 பணியாளர்கள் பணி செய்வதாக வருகைப் பதிவேடு மூலம் தெரிகிறது. அவ்வாறு பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,500 ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1,000 வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது.
அவ்வாறு பிடித்தம் செய்ததற்கான ரசீதை இதுவரை கண்ணில் காட்ட வில்லை என தூய்மைப் பணியா ளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தத் தொகை பிடித்தம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதும் எங்களுக்கு தெரியாது. இது தவிர தூய்மைப் பணிக்கு வரும் போது, அலுவலகத்தில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தக் கூடாது, டீ குடிக்கக் கூடாது என தடை விதிக்கின்றனர். மேலும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் போது பயன்படுத்த வேண்டிய கையுறை, முகக்கவசம், காலணி, துடைப்பம், மண்வெட்டி போன்ற உபகரணங்களை 6 மாதத்துக்கு ஒருமுறை தான் வழங்குகின்றனர்.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும் போது பயன்படுத்தப்படும் கையுறை களையே பெரும்பாலும் வழங்கு கின்றனர். அதை ஒரு நாளைக்கு மேல் பயன்படுத்த முடியாது. உடல் நலம் பாதிப்பு, உறவினர்கள் துக்க நிகழ்வு போன்ற தவிர்க்க முடியாத சூழலில் கூட விடுப்பு கொடுப்பதில்லை. அரைநாள் விடுப்பு கொடுத்து முழுநாள் எனக்கணக்கிடுகின்றனர். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிக்கும் போது, நாப்கின் போன்றவற்றையும் சேகரிக்கி றோம்.
அதன் மூலம் நோய் பரவும்என்பதை அறிந்தும், நகராட்சி நிர்வாகம் முகக்கவசம் அளிப்ப தில்லை. இது எங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் ஆத்தூரில்உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக் குத்தான் செல்ல வேண்டும் என்று நிர்பந்திக் கின்றனர். இது போன்ற பல்வேறு துயரங்களோடு பணி களை செய்து வரும் எங்களுக்கு எப்போது தான் விடியல் ஏற்படும்? என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்புகின்றனர்.
ஒப்பந்த நிறுவனம் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையில் 142 பேர் என்றிருக்கிறது. ஆனால் பணிக்கு வருவதென்னவோ 88 பேர் தான். எஞ்சிய 54 பேருக்கு ஊதியத்தை பெற்று முறைகேடு செய்கின்றனர். வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்துவதில்லை.
நகராட்சியில் சராசரியாக நளொன்றுக்கு 18 டன் குப்பைகள் அகற்றி வந்த நிலையில், ஒப்பந்த நிறுவனம் பணி மேற்கொண்ட நாள் முதல் 40 டன் குப்பைகள் அள்ளுவதாக கணக்கிட்டு ரசீது சமர்ப்பித்து அதன் மூலம் முறை கேடு நடைபெறுவதாக நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரியை தொடர்பு கொண்டபோது, சுகாதார அதிகாரி ரவீந்திரனை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.
ரவீந்திரனை தொடர்பு கொண்ட போது, “குப்பை அள்ளுவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ரசீதை ஏற்கவில்லை. வருங்கால வைப்பு நிதி முறைகேடு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப் படை வசதிகளை செய்து தர ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்படும்” என்றார்.