Published : 24 Jan 2024 06:53 AM
Last Updated : 24 Jan 2024 06:53 AM

காஞ்சியில் ரூ.1,003 கோடி முதலீட்டில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பு ஆலை

சென்னை: அமெரிக்காவின் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.1,003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலக்கை விரைவில் அடைய தமிழக தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதிகளவிலான முதலீடுகள் வரும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்க்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சென்னையில் இம்மாதம் 7,8 தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64,180 கோடி முதலீடு மற்றும் 26 லட்சத்து 90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவை சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் ஆகும்.

இந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், ரூ.1,003 கோடியில், 840 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன்முறையாக ‘ப்ரிசிசியன் கிளாஸ் புராசசிங்’ தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

இந்நிலையில், இத்தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனம் மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலர் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு, ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவன இயக்குநர் அசோக் குமார் குப்தா, கார்னிங் இந்தியா மேலாண்மை இயக்குநர் சுதிர் பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x