

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.64 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்துவைத்து, முதல் போட்டியைத் தொடங்கிவைக்கிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. எனினும், இங்கு பார்வையாளர்கள் முறையாக அமர்ந்து போட்டிகளைப் பார்க்க போதிய கேலரி வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு போன்றவை இல்லை.
இதனால், பலமுறை பார்வையாளர்கள் காளைகள் முட்டி உயிர் இழக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைகின்றனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
2022-ல் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து, 66 ஏக்கரில், ரூ.64 கோடியில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.
‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மைதானத்தை இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, போட்டியைத் தொடங்கிவைக்கிறார்.
இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 3,669 மாடுபிடி வீரர்கள் முன்பதிவுசெய்துள்ளனர். அதேபோல, 9,312 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், 500 காளைகளும், 350 வீரர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்திருந்து கார் மூலம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்துக்குச் செல்கிறார்.