Published : 04 Feb 2018 04:03 PM
Last Updated : 04 Feb 2018 04:03 PM

ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலில் இருந்து வாலிபரை கீழே தள்ளிவிட்டு அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கருதப்படும் திருநங்கை கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, கைதுக்கு பயந்து எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் நேற்று (சனிக்கிழமை) வாலிபர் ஒருவர் திருநங்கையால் ஓடும் ரயிலிருந்து தள்ளிவிடப்பட்டதில் இறந்தார். காப்பாற்றப்போன நண்பருக்கும் காயம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (32), இவரும் இவரது நண்பர் கரம் வீர் பாபுவும் அவர்கள் நண்பர்கள் சிலரும் வேலைதேடி திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணகிரியிலிருந்து ரயிலில் பயணம் செய்துள்ளனர். படிகட்டு ஓரம் தரையில் அமர்ந்து இருவரும் பயணம் செய்துள்ளனர்.

ரயில் ஊத்தங்கரை நிலையத்திலிருந்து புறப்பட்டு சாமல்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ரயிலில் ஏறிய திருநங்கைகள் ஒவ்வொருவரிடமும்  பணம் கேட்டு வசூல் செய்து கொண்டு வந்தனர்.

சத்தியநாராயணனிடம் வந்து பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் எதுவும் இல்லை தானே வேலை தேடித்தான் போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒரு திருநங்கை பணம் இல்லாதவன் எதுக்குடா ரயிலில் வருகிறாய் என எட்டி உதைத்துள்ளார்.

இதில் ஓடும் ரயிலிலிருந்து சத்தியநாராயணன் அலறியபடி கீழே விழுந்துள்ளார். இதில் விழுந்த வேகத்தில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

நண்பரை தள்ளிவிட்டதில் பதற்றமடைந்து அவரை காப்பாற்ற ரயிலிருந்து குதித்த நண்பர் கரம் வீர் பாபுவும் பலத்த காயமடைந்தார். கீழே விழுந்த பாபு தலையில் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிக ரத்த இழப்பு சுயநினைவு இழந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே ரயிலில் இருந்த திருநங்கைகளை பிடிக்க வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு சேலம் கோட்ட ரயில்வே போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் வாலிபர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த திருநங்கை ராகுல் (எ) சுவேதா என்பவர் போலீஸ் கைதுக்கு பயந்து உடனடியாக தப்பித்துச் சென்றார்.

 திருப்பத்தூர் ஜெய்பீம் நகரில் வசித்து வரும் அவர் வீட்டுக்கு சென்றதும் தற்கொலை செய்து கொள்வதற்காக எலிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ளவர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை தேறினார்.

இதனிடையே சுவேதாவை கைது செய்ய சேலம் ரயில்வே போலீஸார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அவரை கைது செய்தனர்.

திருநங்கை அமைப்பு கண்டனம்:

திருப்பத்தூர் திருநங்கை அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த செயலை கண்டித்துள்ளனர்.

திருநங்கைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலையில் அவர்கள் மறுவாழ்வுக்காக எங்கள் அமைப்புகளும், நல்ல உள்ளங்களும் பாடுபட்டு வருகின்றோம். ஆனால் சிலபேர் இது போன்று செய்வதால் ஒட்டுமொத்த திருநங்கைகளே மோசம் என்பது போல் வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

இது திருநங்கைகள் குறித்த சமூகப்பார்வையையும், அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தையும் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.

இதே போல் சுவேதாவுடன் ரயிலில் உடன் சென்ற திருநங்கைகளும் அவரது செயலை கண்டித்துள்ளனர். தாங்கள் அவ்வாறு நடக்கவில்லை தனிப்பட்ட அவரது நடத்தையை தாங்களும் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x