Published : 24 Jan 2024 04:00 AM
Last Updated : 24 Jan 2024 04:00 AM
சென்னை: தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை திறக்கக் கோரி சென்னையில் மணல் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட பல்வேறு சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை திறக்கக் கோரி ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் தலைவர் பி.கோபால் நாயுடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.தன்ராஜ் ஆகியோர் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு மணல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராஜசேகர் உண்ணாவிரதத்தை மாலையில் முடித்து வைத்தார். இந்த உண்ணா விரதப் போராட்டம் தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால்,மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். அதுவும், அரசே மணல் குவாரிகளை நடத்த வேண்டும். மணல் குவாரிகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே மணல் வழங்க வேண்டும். தமிழக அரசு நேரடியாக மணல் இணைய தளத்தை 24 மணி நேரமும் திறக்க வேண்டும்.
இதனால் மணல் எடுத்த லாரிகள் மீண்டும் பதிவு செய்வதற்கு ஏதுவாக அமையும். அரசுக்கும் எவ்வளவு வாகனங்கள் மணலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படைத் தன்மையோடு தெரியும். மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் அரசே லாரிகளுக்கு மணல்வழங்கினால் எந்த முறைகேடுகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்காது. அரசுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் நேரடியாக வருவாய் கிடைக்கும். மற்ற அரசு துறைகளை போல மணலுக்கு கடந்த அரசை போன்று தனியாக ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் மீண்டும் சவுடு குவாரிகள், பட்டா இடங்களில் மண் எடுக்கும் திட்டங்களை உடனடியாக கொண்டு வரவேண்டும்.
இத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் தொய்வு நிலையில் உள்ளது. அரசு மக்களின் நலனையும் தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு மணல் குவாரிகளை திறக்கவில்லை என்றால் 20 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும். இன்னும் 30 நாட்களுக்குள் மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT