Published : 02 Feb 2018 03:08 PM
Last Updated : 02 Feb 2018 03:08 PM

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக பிப்.5-ல் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு

மத்திய அரசின் மாநில விரோத மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முழு விலக்களிக்க வலியுறுத்தியும் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முத்தரசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி இறுதித்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், ‘கட் ஆப்’ கணக்கீட்டு முறையில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கப்பட்டனர்.

இந்த மாணவர் சேர்க்கையில் சமூக நீதிகண்ணோட்டத்தில் இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராமப்புறம், நகர்ப்புறம் என பாகுபாடின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பயனடைந்து வந்தனர்.

மருத்துவக் கல்வியை விரிவுப்படுத்த மாணவர்கள் நலன் கருதி மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற முறையில் அரசு 24 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தேசிய திறன் மற்றும் நுழைவுத் தேர்வு நீட் என்ற புதிய தேர்வுமுறையை மத்திய அரசு அமலாக்கியிருப்பதால் தமிழ்நாடு மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்தார்.

தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வழிவகை செய்யும் இரண்டு சட்டத்திருத்த மசோதாக்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது.

தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாக்களை மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

இப்போது முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு உட்பட மருத்துவக்கல்வி வாய்ப்பு முழுமையாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நீண்டகாலமாக செயல்பட்டு வரும் இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதன் மூலம் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை பறித்துக்கொள்ளும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மாநில உரிமையை காக்கத் தவறிய மாநில அரசு, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களை பயன்படுத்தப்படும் என அறிவித்திருப்பது தமிழக மக்களின்நம்பிக்கைக்கு இழைக்கும் துரோகமாகும்.

மருத்துவக் கல்வியை கார்ப்ரேட் மயமாக்குதல், காவிமயமாக்குதல், சமூக நீதியை மறுத்து, ‘மனுதர்ம’ கொள்ளைகளை அமலாக்குதல் என்றநிலையை மத்தியஅரசு தீவிரப்படுத்திவருகிறது.

எனவே, மத்திய அரசின் மாநில விரோத மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு முழு விலக்களிக்க வலியுறுத்தியும் பிப்ரவரி 5அன்று மாநிலத் தலைநகரிலும், மாவட்டத் தலைநகர்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என பெரியார் திடலில் கூடிய ஜனநாக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x