திருநெல்வேலியில்  நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டார்
திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டார்

“எங்களுக்கு ராமரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” - மத்திய இணையமைச்சர் கருத்து

Published on

திருநெல்வேலி: "ராமரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை" என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

திருநெல்வேலி சி.என்.கிராமத்தில், "நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்" என்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "நலத்திட்டங்களின் முழு பலன்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மத்திய அரசின் நோக்கம். விளம்பரத்துக்காக மத்திய அரசு செயல்படுகிறது என தமிழக முதல்வர் குற்றஞ்சாட்டுவதை முற்றிலும் மறுக்கிறேன். மத்திய அரசு களத்தில் இறங்கி மக்களுக்கான தேவைகளை திட்டங்களாக உருவாக்கி கொண்டு சேர்த்து வருகிறது.

வாகனத்தின் அனைத்து உதிரி பாகங்களும் ஒன்று சேர்ந்து பணி செய்தால் மட்டுமே வாகனம் சிறப்பாக ஓடும் என்பதைப்போல, மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். ராமர் ஒற்றுமை மற்றும் பொதுவுடமையின் அடையாளம். அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை.

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 18 முக்கிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சில இடையூறுகள் இருந்த நிலையில் அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது. முழு பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படும்.

பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. மாநில அரசே அந்த இடத்தை தேர்வு செய்து தந்திருக்கிறது. அந்த இடம் விவசாய நிலங்களாக இருப்பதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில அரசு இந்த பிரச்சினைகளை சரி செய்து தர வேண்டும் அல்லது சரியான வேறு இடத்தை தேர்வு செய்து தர வேண்டும்” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, திருநெல்வேலி எம்.எல்.ஏ. நயினார்நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in