

ஜெ. நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘ஜெயலலிதாவின் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கர்நாடக அரசு ஏலம் விட அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த நகைகளை கர்நாடக அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கர்நாடக அரசின் உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரி மேற்பார்வையில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் வழங்க வேண்டும். இந்த நகைகளை சரிப்பார்த்து பெற்றுக்கொள்ள தமிழக அரசு கூடுதலாக அதிகாரி ஒருவரையும் நியமிக்க வேண்டும். ஜெயலலிதா மீதான வழக்கை நடத்திய செலவினங்களுக்காக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி வழங்க வேண்டும்’ நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் துறை, சமூகநலத் துறை மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநில மகளிர் கொள்கை என்பது பெண்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால பயிற்சி என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டது.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாடு செல்கிறார். இந்த வெளிநாட்டு பயணத்துக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜன.27-ம் தேதியன்று ஸ்பெயின் செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிப்.12-ம் தேதி தமிழகம் திரும்புகிறார். முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் துறை செயலாளர் உள்ளிட்டோர் செல்கின்றனர்.
ரூ.1003 கோடி முதலீடு, 840 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் புதன்கிழமை முதல் போட்டி: மதுரை அருகே அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ரூ.64 கோடியில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா புதன்கிழமை காலை நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து, முதல்முறையாக இந்த மைதானத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டி தமிழக அரசு சார்பில் நடக்கும் நிலையில், வெற்றிபெறும் வீரர், காளைகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை: உயர் நீதிமன்றம் கேள்வி: “நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?” என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையைக் காண அயோத்தியில் குவிந்திருந்த பக்தர்கள் செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் குழந்தை ராமரை தரிசிக்கத் திரண்டனர். காலை 3 மணி முதலே பக்தர்கள் தரிசனத்துக்கு ஆயத்தமாகினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் காவல்துறையினர் திணறினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்குள் செல்லக் கூடினர்.
தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அசாமில் ராகுல் காந்தியின் யாத்திரை தடுத்து நிறுத்தம்: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அசாம் தலைநகர் குவாஹாட்டிக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ராகுல் காந்தி குவாஹாட்டியின் பிரதான பகுதிகள் வழியாக யாத்திரையை மேற்கொள்ளாமல் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும் என்று கூறி யாத்திரை தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி யாத்திரை திட்டமிட்ட பாதையில் நடக்கவில்லை என்று அசாம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் மீண்டும் கடும் சரிவு: நிதி, வங்கி மற்றும் ஊடக பங்குகளின் கடும் சரிவினால் செவ்வாய்க்கிழமை வர்த்தக நேரத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இதனிடையே, தெற்காசிய நாடுகளின் மற்றொரு சாதனையாக இந்திய பங்குச்சந்தை முதல் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்திய பங்குச்சந்தையின் வளர்ச்சி மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் அதனை முதலீட்டாளர்களின் விருப்பமானதாக மாற்றியுள்ளது.
“இது ஆன்மிகம் சார்ந்ததே” - சென்னை திரும்பிய ரஜினி கருத்து: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினி செவ்வாய்கிழமை மாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சிறப்பான முறையில் தரிசனம் நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் திறந்ததும் முதலில் பார்த்த 150 - 200 நபர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது ஆன்மிகம் சார்ந்த நிகழ்வு தான்” என்றார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
24 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “போர் தொடங்கியதில் இருந்து, இந்த நாள் மிக கடினமான நாட்களில் ஒன்று. முழுமையான வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவதை நிறுத்த மாட்டோம்” என்று கூறியுள்ளார்.