

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. சேலத்தில் நடந்த இந்த மாநாடு எதை நோக்கி நகர்ந்தது, சீனியர் உடன்பிறப்புகளின் எண்ணம் என்ன? அதைக் கண்ட ஜூனியர் உடன்பிறப்புகளின் மனதில் கட்டமைந்தது என்ன? உதயநிதியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?
‘இந்தியாவில் இதற்கு முன் எந்த அரசியல் கட்சியும் செய்திடாத வகையில், திமுகவின் 2-வது இளைஞர் அணி மாநில மாநாடு அமைந்திருப்பதாக’ திமுகவைச் சேர்ந்தவர்கள் பெருமைப்படுகின்றனர். அது உண்மைதான் எனச் சொல்லும் அளவில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 100 ஏக்கர் பரப்பில் 9 லட்சம் சதுர அடியில் அரங்கம் அமைத்தனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் இருக்கைகள், ஒரு லட்சம் பேர் வெளியில் நின்று நிகழ்ச்சியைக் காண இடவசதி. அதேபோல், 100 அடி நீளம், 40 அடி அகலம், 6 அடி உயரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. மேலும், 2 லட்சம் பேர் அமர்ந்து உண்ணும் வசதி, கறி விருந்து, தொண்டர்கள் அமரும் இருக்கையில் தண்ணீர் கேன், ஸ்நாக்ஸ் வைத்திருந்தது என களைகட்டியது மாநாடு.
மேலும், முகப்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. இப்படியாக, திமுக மாநாட்டில் பிரமாண்டத்துக்கு பஞ்சமில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் திட்டமிடலால் இந்த மாநாடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு சிறப்பாக நடத்தியும் முடிக்கப்படிருக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் இளைஞர் அணி மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதன் தலைமைப் பொறுப்பு வகித்தவர் ஸ்டாலின். தற்போது 17 ஆண்டுகள் கடந்து இரண்டாவது மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றுள்ளது. இந்த மாநாடு எதை நோக்கி நகர்ந்துள்ளது?
1. உதயநிதிக்கு வழிவிடும் சீனியர்கள்: இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து திமுக முதன்மைச் செயலாளர் நேரு. மேடையிலேயே ’மாநாடு’ என்றால் ’நேரு’. ’நேரு’ என்றால் ’மாநாடு’ எனப் புகழாரம் சூட்டினார்கள். என்னதான் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து நேருவாக இருந்தாலும், மக்களிடையே பரவலாக உதயநிதிதான் மாநாட்டு பிரமாண்டத்துக்குச் சொந்தக்காரர் என்னும் எண்ணம் தோன்றும். ‘மக்களுக்கு இப்படியான பார்வைதான் ஏற்படும்’ எனத் தெரிந்தும் திமுக தலைமை மூத்த நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக் குழுவாக அமைத்த காரணம் என்ன?
இந்த மாநாடு முற்றிலும் உதயநிதியை மையப்படுத்தி மட்டுமே நடந்தது. சில நாட்களாகவே, ‘உதயநிதி துணை முதல்வர் ஆகப்போகிறார்’ என்னும் செய்தி உலாவியது. இந்த நிலையில், அது வதந்தி எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். காரணம், ஏற்கெனவே திமுக குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றச்சாட்டு எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில், உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டால், திமுகவே எதிர்க்கட்சிக்கு விமர்சிக்க பாயின்ட் எடுத்துக் கொடுத்ததாக ஆகிவிடும். எனவே, அதை தலைமை தவிர்த்தது.
சரி, தலைமை (ஸ்டாலின்) உதயநிதியை துணை முதல்வராக்க நினைக்கிறது. மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்னும் கேள்வி எழாமல் இல்லை. இதற்கு பதில் தரும் வகையில்தான் உதயநிதி தலைமை தாங்கும் மாநாட்டை நேருவை ஒருங்கிணைக்க சொல்லியிருக்கிறது தலைமை. இதனால், ’உதயநிதி முக்கிய பொறுப்புக்கு வர பெரிய தலைவர்களிடம் எதிர்ப்பில்லை’ என்னும் பிம்பத்தை ஆணித்தரமாகப் பதிய வைக்க சீனியர்களை இதில் இணைத்து வேலை பார்க்க வைத்திருக்கிறது தலைமை.
2. தலைவர் பதவி நோக்கி அடுத்த அடி: இளைஞர் அணி மாநாடு உதயநிதியை முன்னிறுத்தி நடத்தப்பட்டது. அடுத்த 30 ஆண்டு காலம் திமுகவின் வரலாற்றை எழுதும் முக்கியத் தலைவராக உதயநிதி இருப்பார். அதன் தொடக்கப் புள்ளிதான் இந்த மாநில உரிமைகள் மாநாடு என்று சொல்லும் வகையில் இந்த மாநாடு அமைந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதைக் குறிப்பிடும் வகையில், பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் திமுக கட்சியினை வழிநடத்தும் திறமை உதயநிதிக்கு இருக்கிறது எனப் பேசினார்.
எம்.எம்.அப்துல்லா எம்.பி, ‘‘இயக்கத்தை வழிகாட்டும் ஒரே தலைவர் உதயநிதி’’ என்றார். செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, “நாளைய இயக்கத்தின் தலைவர்” என வெளிப்படையாகக் கருத்தும் தெரிவித்தார். அதை உறுதி செய்வதுபோல், “இளைஞர் அணியில் இருக்கும் நாங்கள் வளர்ந்துவிட்டோம். எங்களுக்குப் பொறுப்பைக் கொடுங்கள், வெற்றியைப் பெற்று சிறப்பாகச் செயல்படுவோம்” என்றார் உதயநிதி. ‘‘அடுத்தகட்ட இயக்கத்தை வழிநடத்த தான் யாருடன் பயணிக்க விரும்புகிறேனோ அதற்கு ஒப்புதல் தாருங்கள்’’ என ஸ்டாலிடன் உதயநிதி மேடையிலே கேட்டேவிட்டார். இது அவரின் அடுத்தகட்ட பணி என்ன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
3. சேலத்தின் ஏன் மாநில உரிமைகள் மாநாடு? - இளைஞர் அணி மாநாடாக இருந்தாலும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் மாநாடு என்னும் நோக்கத்தில்தான் இந்த மாநாடு நடத்தப்பட்டது. அது ஏன் சேலத்தில் வைக்கப்பட்டது என்பதற்கு மாநாட்டிலேயே பதில் சொல்லப்பட்டது. ‘மாநில உரிமைகளை சென்ற ஆட்சியில் மத்திய அரசிடம் அடகு வைத்த எடப்பாடி பழனிச்சாமி சேலத்தைச் சேர்ந்தவர்தான், அவருக்கு புரிய வேண்டும் என்பதற்காக இங்கு மாநாடு நடக்கிறது’ என சொல்லப்பட்டது.
ஆனால், இதில் மறைமுக காரணமும் இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரையிலும் திமுகவில் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவில் தலைவர்கள் யாருமில்லை. அதனால், திமுக கொங்குப் பகுதியில் சருக்கலைச் சந்தித்து வருகிறது. இதனால்தான், செந்தில் பாலாஜி திமுகவுக்குள் அழைத்து வரப்பட்டார். இப்போது அவரை ‘உள்ளே’ இருக்கும் நிலையில், அங்கு புது தலைவரைக் கொண்டு வர வேண்டிய தேவை திமுகவுக்கு உள்ளது. எனவே, அந்தப் பொறுப்பை உதயநிதியிடம் வழங்கியுள்ளதோடு, கொங்குப் பகுதியில் பிரம்மாண்டமாக மாநாடும் நடத்தப்பட்டுள்ளது.
4. கொங்கின் முகமாக உதயநிதி! - தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக என இரு கட்சித் தலைவர்களும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். இரு கட்சிகளும் கொங்கு பகுதிக்குள் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால், திமுகவை பொறுத்தவரை 1971-ம் ஆண்டு பொங்கலூர் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரான பொங்கலூர் ந.பழனிச்சாமி 1991 முதல் 2011 வரை 20 ஆண்டுகள் தி.மு.க கோவை மாவட்ட செயலாளராக இருந்தார். இவர் திமுகவின் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார். இவருக்குப் பிறகு, கொங்குப் பதிகுதிக்கு ஆளுமைமிக்க தலைவர் இன்றி திமுக தடுமாறி வந்தது. அதனால், கொங்குப் பகுதியில் களப்பணி கூட சுணக்கம் ஏற்பட்டது;
அடுத்தடுத்த தேர்தல்களில் கொங்கில் தொடர் தோல்வியை திமுக சந்தித்தது. இந்நிலையில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றபோது, கொங்கு பகுதியில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் முக்கியத்துவம் பெற்றனர். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலான தலைவர் இன்றி தவித்த திமுக, சிவசேனாபதியை வேலுமணிக்கு எதிராக களமிறக்கியது. அவர் தோல்வியைச் சந்தித்தார். எனவே, அந்த இரு கட்சிகளின் முக்கியத்துவத்தைக் கொங்கு பகுதியில் முறியடிக்கும் வகையில், உதயநிதியை திமுகவின் கொங்கு முகமாக மாற்றவும் நிலைநிறுத்துவதற்கான முன்னோட்டமாகவும் தான் இந்த மாநாடும் அமைந்துள்ளது.
இப்படி, அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் மிக முக்கியமான தலைவராக வலம் வரவிருக்கிறார் உதயநிதி. சனாதன விவகாரம் திமுகவுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. ஏன்... டி.ஆர்.பாலு போன்ற மூத்த தலைவர்களை டென்ஷனாக்கி, உதயநிதியை மேடையில் நேரடியாகக் கண்டிக்கவும் வைத்தது. ஆனால், அது அவருக்கு தேசிய அளவிலும் நல்ல அறிமுகத்தை உண்டாக்கியது.
திமுக அமைச்சர்கள் மீது இருக்கும் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநாட்டில் ஈ.டி, சிபிஐ மற்றும் அதை அனுப்பும் பிரதமர் மோடி மீது எங்களுக்குப் பயமில்லை என உரக்கப் பேசியிருக்கிறார் உதயநிதி. எனவே, ‘உதயநிதி’ என்னும் பெயர், தேசிய மற்றும் மாநில அரசியலில் தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்துள்ளதை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இம்மாநாடு.