

சென்னை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்க உத்தரவை தமிழக அரசு நேற்று ரத்து செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீஸார் பிடுங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்தி,தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், உள்துறை செயலாளர் அமுதா தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. மேலும், பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு3 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, தமிழக உள்துறை நேற்றுஉத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வீர் சிங்குக்கு விரைவில் பணியிடம் ஒதுக்கப்படும் எனகாவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.