Published : 23 Jan 2024 04:00 AM
Last Updated : 23 Jan 2024 04:00 AM

“பாஜகவின் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்கள் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கின்றனர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: சமூக நீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மத நல்லிணக்க மண் தான் தமிழகம் என்பதை சேலம் இளைஞரணி மாநாடு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியுள்ளது. மாநாட்டு பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், திமுகவின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.

சேலம் மாநாட்டின் வெற்றியைக் கண்டு மிரண்டு போன அரசியல் எதிரிகள், கொள்கை எதிரிகள் வதந்தி பரப்பும் வேலையை, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தொடங்கி விட்டனர். ராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழகத்தில் அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொய் செய்திகளை பரப்பினர். அமைச்சர் சேகர் பாபு, இதற்கு மறுப்பு தெரிவித்து உண்மை நிலையை வெளியிட்டார்.

ஒரு வதந்தியை பரவச்செய்து, அதனை உண்மை போல ஆக்கும் பணியை பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமாகிவிட்டது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின்போது காணொலி காட்சி ஒளிபரப்ப அறநிலையத்துறை தடை விதித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால், அந்நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டவர்களே, காணொளி காட்சிகளை திரையிட மாட்டோம் என குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர்.

இதனை மறைத்து மத்திய நிதியமைச்சர் பரப்பிய திட்டமிட்ட வதந்தி, விடிவதற்குள் பொய் என அம்பலமானது. அதுமட்டுமின்றி, இதற்கு சென்னை உயர் நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்கு வழிவகுக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவி, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாக தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை அறியாமல் ஆளுநர் பொறுப்பில் உள்ளார் ஆர்.என்.ரவி. கோதண்ட ராமர் திருக்கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்துக்கோ அடக்கு முறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் அலற அரசியலன்றி வேறு என்ன இருக்க முடியும்.

தமிழகத்தில் எந்த கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் கோயில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் போதும், திருவாரூர் ஆழித் தேரோட்டத்தின் போதும், கும்பகோணம் மகா மகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் மதநல்லிணக்க நிலமாகிய தமிழகத்தில் காணமுடியும்.

பாஜக தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்ட ராமர் கோயிலில் ஆளுநர் தேடியிருப்பது பக்தியா, பகல்வேடமா? தமிழகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x