மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றியோருக்கு விருதுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றியோருக்கு விருதுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Updated on
2 min read

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள், சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை சார்பில் 3 கோயில்களில் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருதை எ.மோகனுக்கும், சிறந்த நிறுவனத்துக்கான விருதை கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்துக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதை மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் திருச்சி ஆசிரியர் அ.வாசுகி தேவிக்கும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கற்பித்ததற்காக கிருஷ்ணகிரி அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜா.அருண் குமாருக்கும், பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கு கற்பித்ததற்காக மதுரை செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் அ.பாக்கிய மேரிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

மேலும், சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவருக்கான விருதை கை, கால் பாதிக்கப்பட்டோர், தொழு நோய் குணமடைந்தோர் பிரிவில் எஸ்.நீலா வதி ( சிறந்த சுய தொழில் புரிபவர் ), செ.சுதீஷ் குமார் ( சிறந்த பணியாளர் ), அறிவுசார் குறையுடையோர் பிரிவில் பா.முத்துக் குமார், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பிரிவில் ரா.விஜய லட்சுமி, பல் வகை மாற்றுத் திறனாளி பிரிவில் வி.சவுந்திர வள்ளி, மன நோயால் பாதிக்கப்பட்டோர் பிரிவில் இ.ஜாக்குலின் சகாய ராணி, புற உலக சிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடுடையோர் பிரிவில் ஆ.பிரேம் சங்கர் ஆகியோருக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்துக்கான விருது, காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்துக்கும், சிறந்த ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருது, செவித்திறன் குறைபாடுடையோருக்கு கற்பித்த காஞ்சிபுரம் அரசு செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கான இலவச ஆரம்ப பயிற்சி மைய ஆசிரியர் எம்.பாலகுஜாம்பாளுக்கும், அறிவு சார் குறையுடையோருக்கு கற்பித்த கன்னியாகுமரி சாந்தி நிலையம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி ஆசிரியர் ஜெ.ஜெய சீலனுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சிறந்த ஓட்டுநருக்கான விருது, இ.சுந்தர் வேலுவுக்கும், சிறந்த நடத்துநருக்கான விருது ஏ.தர்சியஸ் ஸ்டீபனுக்கும் வழங்கப்பட்டது.

அன்னதான திட்டம்: மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன், விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, அறநிலையத் துறை செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமர குருபரன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளி தரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in