Published : 23 Jan 2024 04:10 AM
Last Updated : 23 Jan 2024 04:10 AM

பொங்கலையொட்டி கூடுதல் கட்டணம் - 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம் விதிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சத்து55,414 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக போக்குவரத்து ஆணையரகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்களுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து கடந்த 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைத்து சோதனை மேற்கொள்ளப் பட்டது. இதன் படி மாநிலம் முழுதும் 15,659 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இதற்காக அப்பேருந்துகளுக்கு ரூ.36 லட்சத்து 55,414 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கி வரும் 1,000 ஆம்னி பேருந்துகளை வரைமுறைபடுத்துவதற்கான காலக்கெடு வரும் மார்ச் 21-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தகைய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உடனடியாக தொடர்புடைய மாநிலங்களில் இருந்து என்ஓசி பெற்று, வரும் மார்ச்சுக்குள் தமிழகத்தில் மறுபதிவு செய்து கொண்டு பர்மிட் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் இந்த வரன் முறைபடுத்தும் நடவடிக்கைக்கு ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பை நல்க வேண்டும். வரும் ஏப்.1-ம் தேதி முதல் பிற மாநிலங்களில் பதிவு செய்து, தமிழகத்தில் இயங்கி வரும் வரன்முறைபடுத்துப்படாத ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்கப் படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x