

சென்னை: மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாளை ( ஜன.24 ) முதல் ஏப்.5 வரை நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி, மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடத்துவதென ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை ( ஜன.24 ) முதல் ஏப்.5-ம் தேதி 11 நாட்கள் மாவட்ட வாரியாக சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. நாளை கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.