Published : 04 Apr 2014 10:44 AM
Last Updated : 04 Apr 2014 10:44 AM

மோடிதான் பிரதமராக வரவேண்டும்: திண்டுக்கல் மாயத்தேவர் சிறப்புப் பேட்டி

“இந்தத் தேர்தலில் அதிமுக-வும் வரக்கூடாது; திமுக-வும் வரக் கூடாது. பாஜக அணி வெற்றிபெற்று மோடிதான் பிரதமராக வரவேண்டும்’’என்று இரட்டை இலைச் சின்னத்தின் முதலாவது வெற்றி வேட்பாளரான திண்டுக்கல் மாயத்தேவர் (80) கூறியிருக்கிறார்.

அதிமுக-வை எம்.ஜி.ஆர். ஆரம்பித்த ஆறே மாதத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளராக திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மாயத்தேவரை நிறுத்தினார் எம்.ஜி.ஆர். மாயத்தேவரின் வெற்றி அதிமுக-வுக்கு தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை தந்தது.

தற்போது நடைபெற்று வரும் தேர்தலில், ஜெயலலிதாவை பிரதமராக்குவோம் என அதிமுகவினர் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் மாயத்தேவர் மாறான கருத்தைச் சொல்லி இருக்கிறார். இதுதொடர்பாக மாயத்தேவர் ‘தி இந்து”-வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கட்சி எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே வேட்பாளராக நிறுத்துமளவுக்கு உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது?

அதிமுக-வை எம்.ஜி.ஆர் தொடங்கியபோது திமுக ஆட்சியில் இருந்தது. அதிமுக-வினர் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளைப் போட்டார் கருணாநிதி. அப்போது நான் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தேன். தினமும் அதிமுக-வினர் முப்பது நாற்பது பேருக்காவது ஜாமீன் எடுத்துக் கொடுப்பேன். அதுபோன்ற நேரங்களில் மாலையில் எம்.ஜி.ஆர் வீட்டுக்குச் சென்று அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பணமே வாங்காமல் அதிமுக-வினருக்கு வாதாடியதற்காக எம்.ஜி.ஆர். கொடுத்த பரிசுதான் திண்டுக்கல் தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்தது.

அப்போது, அதிமுக புதுக்கட்சி என்பதால் உங்களுடைய வெற்றியை எதிர்பார்த்தீர்களா?

தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததுமே நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு தந்துவிட்டது.

எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் வித்தியாசம் உள்ளதா?

எம்.ஜி.ஆர். எப்போதுமே இரவு நேர பிரச்சாரம்தான் செய்வார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பெண்கள் விடிய விடிய தூங்காமல் விழித்துக் காத்திருப்பார்கள். ஆனால் இந்த அம்மா எம்.ஜி.ஆருக்கு நேர் மாறாக மொட்டைவெயிலில் பிரச்சாரம் செய்கிறார். மக்களை தேடிப் போய் பிரச்சாரம் செய்யாமல் திரட்டிவந்து பிரச்சாரம் செய்கிறார். எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது.

அதிமுக-வில் தொடர்ந்து இருமுறை எம்.பி. அந்தஸ்தை கொடுத்த அதிமுக-வை விட்டுவிட்டு ஏன் திமுக-வில் சேர்ந்தீர்கள்?

நான் இரண்டுமுறை எம்.பி-யாக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்குப் பிறகு, திமுக-விலிருந்து வந்த சத்தியவாணி முத்துவை 1978-ல் எம்.ஜி.ஆர். மத்திய அமைச்ச ராக்கினார்; என்னைகண்டுகொள்ள வில்லை. அந்த ஆத்திரத்தில் அவரிடம் நேரில் சென்று நியாயம் கேட்டேன். பதில் கூறாமல், என்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார். அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் மன வருத்தத்துடன் எம்.ஜி.ஆரை விட்டுப் பிரிந்து திமுக-வில் சேர்ந்தேன்.

நெருக்கடி நிலைக்கு பின் 1979-ல் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட நீங்கள்தான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறதே?

ஆமாம். நான் மக்களவையில் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால், இந்திரா காந்திக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவர் எப்போதுமே என்னை “மை சன்' என்று தான் அழைப்பார். திமுக-வில் சேர்ந்ததுமே இந்திரா காந்தியிடம், ’காங் கிரஸும் திமுக-வும் மீண்டும் கூட்டணி சேர வேண்டும்’ என்றேன். ’கருணாநிதியிடம் முதலில் பேசுங்கள் ’ என்றார். இந்திரா காந்தி. இந்த விஷயத்தை கருணாநிதியிடம் எடுத்துச் சொன்னேன். ’அந்தம்மா எப்படி நம்மிடம் கூட்டணி சேரும்? என்றார் கருணாநிதி. அப்போதே இந்திரா காந்திக்கு போனைப்போட்டு கருணாநிதியிடம் பேசவைத்தேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி இப்படித்தான் ஏற்பட்டது.

பிறகு எதற்காக திமுக-விலிருந்தும் விலகினீர்கள்?

திமுக-விலும் ஐந்து ஆண்டுகள் எம்.பி-யாக இருந்தேன். அங்கும் நேர்மைக்கு மரியாதை இல்லை. வாரிசு அரசியல், அதனால் அரசியலே பிடிக்காமல் ஒதுங்கிவிட்டேன். இப்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை.

தேமுதிக-வை தொடங்கியபோது அதன் தலைவர் விஜயகாந்த் உங்களை அழைத்தாராமே?

அழைப்பு வந்தது; சேரவில்லை. என்னுடைய முதல் திண்டுக்கல் இடைத்தேர்தலில் எனக்காக வேலை பார்த்ததாக அவர் அடிக்கடிச் சொல்வார். ஆனால், விஜயகாந்த்துக்கு தலைவருக்கு உண்டான பண்பே இல்லை. கறுப்பு எம்.ஜி.ஆர். என்கிறார். எம்.ஜி.ஆரை தவிர வேறுயாரும் எம்.ஜி.ஆராக முடியாது.

இந்த தேர்தலில் அதிமுக-வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது?

கம்யூனிஸ்ட்களை கழற்றி விட்டது அதிமுக செய்த மிகப்பெரிய தவறு. என்னைக் கேட்டால், இந்தத் தேர்தலில் திமுக-வும் வரக்கூடாது, அதிமுக-வும் வரக்கூடாது. பாஜக அணி வெற்றிபெற்று மோடிதான் பிரதமராக வரவேண்டும்.

திண்டுக்கல் இடைத்தேர்தலில் எனக்காக வேலை பார்த்ததாக விஜயகாந்த் அடிக்கடிச் சொல்வார். ஆனால், அவரிடம் எம்.ஜி.ஆருக்கு உண்டான பண்பே இல்லை. கறுப்பு எம்.ஜி.ஆர். என்கிறார். எம்.ஜி.ஆரை தவிர வேறுயாரும் எம்.ஜி.ஆராக முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x