ராமாயணத்துடன் தொடர்புடைய தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.
Updated on
2 min read

ராமேசுவரம்: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், ராமாயணத்துடன் தொடர்புடைய தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி வழிபாடு செய்தார். பின்னர் கோதண்டராமர் கோயிலில் தரிசனம் செய்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து, முக்கிய ஆன்மிகத் தலங்களில் வழிபாடு நடத்தினார்.

3 நாட்கள் பயணமாக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அன்று மாலை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். இரவில் ராமகிருஷ்ணமடத்தில் தங்கினார்.

நேற்று காலை 9 மணியளவில் ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்குப் பிரதமர் சென்றார். அங்கிருந்தபடி, தொலைநோக்கி மூலமாக ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படும் இடங்களைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மலர்களைத் தூவி வழிபாடு செய்தார். கடற்கரையோரத்தில் நாற்காலியில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர், அரிச்சல்முனையில் உள்ள அசோகச் சின்ன ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விபீஷணர் பட்டாபிஷேகம்: அதன் பின்பு தனுஷ்கோடியில் ராமர், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் நடத்திய தலமான கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடிலிருந்து பகல் 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர், 12.40 மணியளவில் மதுரை விமான நிலையம் சென்றடைந்தார்.

அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை, பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், உள்ளிட்டோர் சந்தித்தனர். பகல் 1 மணியளவில் தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக பிரதமரின் தனுஷ்கோடி வருகையையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலோரப் பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்திய கடற்படை, கடலோரக் காவல் படையின் கப்பல்கள், மரைன் போலீஸாரின் ரோந்துப் படகுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன.

பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி வருவதற்கும், மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையப் பகுதியில் 8 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரிச்சல்முனை குறித்து பிரதமர் கருத்து: ஸ்ரீரங்கம், ராமேசுவரம், அரிச்சல்முனையில் வழிபாடு செய்தது குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பதிவுகளில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்தக் கோயிலுடனான பிரபு ஸ்ரீராமரின் தொடர்பு நெடியது. பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசிர்வதிக்கப்பட்டதைப் பாக்கியமாக உணர்கிறேன். 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் ராமநாத சுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன்.

பிரபு ஸ்ரீராமின் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்த அரிச்சல் முனையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ராமர் சேதுவின் (ராமர் பாலத்தின்) தொடக்கப் புள்ளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in