Published : 22 Jan 2024 05:40 AM
Last Updated : 22 Jan 2024 05:40 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியதாவது:
ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப கோயில்களுக்குள் எல்இடி திரைகள் வைக்கிறோம். அதற்கு கட்டணமும் வசூலித்துக் கொள்ளட்டும். ஆனால், அதைக்கூட தமிழக அரசு ஏன் தடுக்கிறது. இந்த நிகழ்வை கோயிலில் அமர்ந்து பக்தர்கள் கண்டு களிப்பதற்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திமுக அரசு சிறுபான்மை அரசியல் செய்கிறது.
அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, தலையும் புரியாமல், வாலும் புரியாமல் ஏதோ கதை கூறிக்கொண்டு இருக்கிறார். கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்ட கடிதத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறோம்.
கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்வுக்கு அனுமதி தரமாட்டோம் என கூற அரசுக்கு என்ன உரிமை உள்ளது. பிற மதத்தவர் இருக்கும் ஊரில் இந்து பண்டிகைகளை கொண்டாட கூடாதா. ஆணவம் அதிகமாகி, மக்களின் வழிபாட்டு நெறிமுறைகளில் எல்லாம் கைவைக்க முடிவு செய்துவிட்டனர். ஓரளவுக்குதான் பொறுமை காக்க முடியும்.
தமிழக அரசின் தடையை மீறி அனைத்து கோயில்களிலும் அன்னதானம், சிறப்பு பூஜைகள் நடக்கும். இதை யார் தடுக்கிறார்கள் என பார்ப்போம். இந்நிகழ்வை தடுத்தால் மட்டுமே சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
திடீர் தலைவர் என்று என்னை கே.பி.முனுசாமி விமர்சிக்கிறார். தான் இருக்கும் இடம் அறிந்து பேச வேண்டும். பாஜகவில் ஒவ்வொரு தொண்டரும் முதல்வர் நாற்காலிக்கு தகுதியானவர்தான். நிறைய தலைவர்களை உருவாக்கவே பாஜகவுக்கு வந்திருக்கிறேன். மக்கள், ஊழல்வாதிகள் பக்கம் இல்லை. மோடியின் பக்கம் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT