Published : 22 Jan 2024 05:56 AM
Last Updated : 22 Jan 2024 05:56 AM

மட்டன் பிரியாணி முதல் விவிஐபி கேன்டீன் வரை - சேலம் திமுக மாநாடு ஹைலைட்ஸ்

பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடந்த திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் போது பல்வேறு வாகனங்களில் வந்த தொண்டர்கள். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்: திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் திமுகவினர் 5 லட்சம் பேர் கலந்து கொள்வர் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநாட்டுக்கு சென்னையில் இருந்து தனி ரயில் மூலமும், அனைத்து மாவட்டங்களில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் திமுகவினர் திரண்டு வந்திருந்தனர். பெண்களும், பலர் குழந்தைகளுடனும் மாநாட்டுக்கு வந்திருந்தனர்.

வெளியூர்களில் இருந்து தொண்டர்கள் வருவதற்கு சற்று தாமதம் ஆகியிருந்த நிலையில், மாநாட்டின்போது காலையில் தொண்டர்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. மாநாட்டுத் திடல் அமைந்திருந்த சேலம்- சென்னை 4 வழிச்சாலையிலும் போக்குவரத்து மிதமாக இருந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல, தொண்டர்கள் வருகை அதிகரிக்க, மாநாடு களைகட்டி அரங்கினுள் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பின. சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து, ஒரு கட்டத்தில் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல, மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்களில் பெரும்பாலானோர், ‘திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு’ என பொறிக்கப்பட்ட டி- சர்ட் அணிந்து வந்திருந்தனர்.

மாநாட்டுத் திடலில் 5 நுழைவு வாயில்களிலும், முகப்பின் இரு பகுதிகளில் ஒருபுறத்தில் முரசொலி புத்தக நிலையம் என்ற அரங்கில் புத்தக கண்காட்சி, மறுபுறம் இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகம் என்ற அரங்கில், திமுக இளைஞரணி குறித்த புகைப்படக் கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் பலர் இந்த அரங்குகளுக்கு சென்று, போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

மாநாட்டு அரங்கில் மேடைக்கு நேராக ஒரு வரிசை, அதன் இருபுறத்திலும் தலா ஒரு வரிசை என 3 வரிசைகளாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மேடைக்கு எதிரே முதல் வரிசையின் முதல் பகுதியில், விவிஐபிகளுக்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதில் துர்கா ஸ்டாலின், செல்வி, மு.க.தமிழரசு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

ஸ்நாக்ஸ்: தொண்டர்களுக்கான இருக்கைகளில் அவர்கள் அமர்வதற்கு முன்னரே, மஞ்சள் பையில் பிஸ்கெட், மிக்சர் பாக்கெட், பிரெட் பாக்கெட், குடிநீர் பாட்டில், சிறிய ஜாம் பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இதனால், தொண்டர்கள் இருக்கையில் இருந்து குடிநீர், நொறுக்குத் தீனிக்காக வெளியே செல்வதும், அதனால் கூட்டத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது.

மதிய உணவு: மாநாட்டில் பங்கேற்க வரும் அனைவருக்கும் மதியம் சைவ, அசைவ உணவு வழங்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதிய உணவு வழங்குவதற்காக, மாநாட்டின் இரு பகுதிகளில் பிரம்மாண்டமான சமையலறை அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பெரிய அண்டாக்களில் தம் போடப்பட்டு, பிரியாணி தயாரிக்கப்பட்டது. மதிய உணவு வேளையில் தொண்டர்கள் அனைவருக்கும் பிளாஸ்டிக் தட்டில் பேக்கிங் செய்யப்பட்டு பிரியாணி வழங்கப்பட்டது.

அதில், மட்டன் பிரியாணி, சில்லி சிக்கன் பீஸ், கத்தரிக்காய் தால்சா, பிரெட் அல்வா, பாயாசம் உள்ளிட்டவை இருந்தன. மேலும், மதிய உணவு பாக்கெட்டுடன் குடிநீர் பாட்டில் மற்றும் காலையில் மஞ்சள் பையில் கொடுக்கப்பட்ட ஸ்நாக்ஸ் பாக்கெட் உள்ளிட்டவை தாராளமாக வழங்கப்பட்டன. குறிப்பாக, குடிநீர் பாட்டில் தாராளமாக வழங்கப்பட்டது. மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே கழிவறைகள், நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

விவிஐபி கேன்டீன்: மாநாட்டு அரங்கின் பின்புறத்தில், கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டின் மாதிரி வடிவில், விவிஐபிக்கள் இளைப்பாறும் ஒரு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே குளிர்சாதன வசதியுடன் கூடிய இளைப்பாறும் அறை மற்றும் விவிஐபி உணவருந்தும் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. அதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவாக சைவம், அசைவம் என தனித்தனி உணவு வகைகள், தேநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மாநாட்டு நிகழ்வுகள் ட்ரோன்கள் மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு, மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான எல்இடி திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x