Published : 22 Jan 2024 10:10 AM
Last Updated : 22 Jan 2024 10:10 AM
சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி மாதம்26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலும்பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் 5அடுக்கு பாதுகாப்பு முறை அமலுக்குவந்துள்ளது. இது வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள்உச்சக்கட்ட பாதுகாப்பாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமல்படுத்தப்படஉள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை, பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்கின்றனர். விமான நிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து பணியில்ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலைய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் நீண்ட நேரமாக நிற்கும் கார்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் திவீரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின், அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். பார்வையாளர்கள் வருகைக்கான தடை ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில்இருப்பதால், அது மேலும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது, கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களுக்கு உள்ளே செல்லும் இடத்தில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாலும், விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள்விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரைமணி நேரத்துக்கு முன்னதாகவும் வருமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT