Published : 22 Jan 2024 07:07 AM
Last Updated : 22 Jan 2024 07:07 AM
சேலம்: திமுகவை அடுத்து வழி நடத்தும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு, என சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது: சென்னையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொண்டு இருக்கிறேன். அதன் பின்னர், திமுகவின் அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். ஆனால், தற்போது நடைபெற்ற இளைஞரணி மாநாடு போல பெரிய பிரம்மாண்ட மாநாட்டை கண்டது இல்லை. நூறு ஆண்டு கால திராவிட இயக்கத்தில் கருணாநிதி 50 ஆண்டுகள் தலைவராக இருந்தார். இப்போது, ஸ்டாலின் தலைவராக உள்ளார். இங்கு பேசியவர்கள், திமுகவை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அதை சொல்வதற்கு உரிமையும், தகுதியும் எனக்கும் உண்டு, என்றார்.
மாநாட்டில் கவுரவமும், பாராட்டும்: திமுக இளைஞரணி மாநில மாநாட்டின்போது , உதயநிதி தலைமையில் இளைஞர் அணியினர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வழங்கி கவுரவித்தனர்.
*திமுக இளைஞரணி மாநில மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கே.என்.நேரு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் வெள்ளி வாள் மற்றும் வெள்ளி கேடயம் வழங்கினார்.
இதேபோல், இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு, மாநாடு நடைபெறும் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரபு, வெள்ளி செங்கோல் வழங்கினார்.
திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் விழா மலர், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் ஆங்கில புத்தகம் ஆகியவற்றை ஸ்டாலின் வெளியிட்டார். ‘நீட்’ தேர்வு விலக்கு கோரி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் 85 லட்சம் கையெழுத்துகளின் ஒரு பகுதியை முதல்வரிடம் வழங்கினர்.
‘திமுக மாநாடு உலக சாதனை’ எனக் குறிப்பிட்டு, யுனிக் வேர்ல்டு அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை இளைஞரணி செயலாளர் உதயநிதி திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கி பாராட்டு பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT