

தன்னம்பிக்கையுடன் செயல் பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிமுக நிர்வாகிகள் 9 பேர் இல்லத் திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார். அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன் மகன் ஐயப்ப ராஜ் - அருணாஸ்ரீ, வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் மகன் வெங்கட்ராமன் - சுபிதா, அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம.ராசு மகன் பாலாஜி - பிரியங்கா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகள் காயத்ரி - கிருஷ்ணபாரத், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ.எஸ்.வெங்கடேஸ்வரன் - சுவாதினி, விழுப்புரம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் திண்டிவனம் கே.சேகரின் மகன் ஜெயப்பிரகாஷ் - ராஜேஸ்வரி உள்ளிட்ட 9 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசியதாவது:
வாழ்க்கையில் முன்னேறும் போது பல தடைகள் வரலாம். அவற்றைக் கண்டு மலைத்துப் போய் மனம் தளர்ந்து விடுபவர் களால் வெற்றியை அடைய முடியாது. தடைகளைத் தகர்த் தெறியக் கூடிய மனப்பாங்கை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். கடவுள் மீதும் உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை வைத்தால் துன்பங்களை முறியடித்து வெற்றியை எட்டுவது நிச்சயம். ‘எல்லாம் நன்மைக்கே’ என்று எடுத்துக்கொள்ளும் பக்குவம் ஏற்பட்டால், தடைகளைத் தாண்டி இலக்கை நோக்கி பயணம் செய்ய அது வழி வகுக்கும்.
ஒரு மன்னர், வேட்டையாடிக் கொண்டிருந்தபோது கூரிய வாளால் அவரது விரல் துண்டாகிவிட்டது. மன்னர் வேதனையுடன் இருக்க, ‘எல்லாம் நன்மைக்கே’ என்று அமைச்சர் கூறினார். மன்னருக்கு கோபம் வந்து, அமைச்சரை தூக்கிலிட உத்தரவிட்டார். அமைச்சரை வீரர்கள் அழைத்துச் சென்றதும், மன்னர் தனியே மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காட்டுவாசிகள், மன்னரைப் பிடித்து நரபலியிடத் தயாரானபோது, விரல் துண்டிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தனர். அங்கஹீனம் உள்ள ஒருவரை நரபலியிடுவது முறை யல்ல என்று கூறி அவரை விடுவித்தனர். உடனே மன்னருக்கு ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற அமைச்சரின் வார்த்தை நினைவுக்கு வந்தது. விரல் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் தாம் உயிருடன் இருந்திருக்க முடியாது என்பதை உணர்ந்த மன்னர், அமைச்சரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டு, அவரிடம் வருத்தமும் தெரிவித்தார். உடனே அமைச்சர், ‘எல்லாம் நன்மைக்கே’ என்றார். ‘உங்களுக்கு மரண தண்டனை விதித்தேன். இதில் என்ன நன்மை இருக்கிறது?’ என்று கேட்டார் மன்னர்.
அதற்கு அமைச்சர் சிரித்துக் கொண்டே, “மன்னா, ஒருவேளை நீங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால், அந்தக் காட்டுவாசிகள் உங்களை விடுவித்து என்னை நரபலி கொடுத்து இருப்பார்களே’’ என்றார்.
எனவே, சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்கள், பிரச்சினைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும். அதை அப்படி நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த பணியை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும்.
‘எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்’ என்பதை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் செயல் பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
கிலுகிலுப்பை வேண்டுகோள்
விழாவில் பேசிய அமைச்சர் செந்தூர்பாண்டியன், புதுமணத் தம்பதியரைப் பார்த்து, “உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அடுத்த ஆண்டு இதே நாளுக்குள் நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்று அம்மா அறிவித்துள்ள கிலுகிலுப்பையுடன் கூடிய ‘அம்மா பரிசுப் பெட்டகத்தை’ வாங்க வேண்டும்” என்றார். இதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.