Published : 07 Feb 2018 08:56 AM
Last Updated : 07 Feb 2018 08:56 AM

காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பட்டுச் சேலை கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை: தாதா ஸ்ரீதருடன் உள்ள தொடர்பு பற்றி விசாரணை?

காஞ்சிபுரத்தில் பிரபலமான 2 பட்டுச் சேலை கடைகளில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் நடுத்தெருவில் ஏ.எஸ்.பாபுஷா என்ற துணிக் கடையும், காந்தி வீதியில் பிரகாஷ் சில்க்ஸ் என்று துணிக்கடையும் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு பட்டுச் சேலைக் கடைகளில் வருமான வரி ஏய்ப்பு நடப்பதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து வருமான வரித்துறையினர் 30 பேர் 10 கார்களில் வந்தனர்.

அந்த அதிகாரிகள் 2 பிரிவுகளாக பிரிந்து ஒரு குழுவினர் பாபுஷா கடைக்கும், மற்றொரு பிரிவினர் பிரகாஷ் சில்க்ஸுக்கும் சென்றனர்.

இவர்கள் நுழைந்ததும் முதலில் வாடிக்கையாளர்களை மட்டும் வெளியேற்றினர். பின்னர் ஊழியர்களிடம் சில விவரங்களைக் கேட்டுவிட்டு அவர்கள் எந்த ஆவணங்களையும் வெளியில் கொண்டு செல்லாதபடி சோதனை செய்து சிலரை மட்டும் வெளியேற்றினர்.

விசாரணைக்குத் தேவைப்படும் நபர்களை மட்டும் உள்ளே இருக்கும்படி வலியுறுத்தினர். மேலும் அங்குள்ளவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

தாதாவுடன் தொடர்பா?

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலனுக்கும் நேற்று வருமான வரி சோதனை நடந்த ஒரு ஜவுளிக் கடையைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேறு சில துணிக்கடை உரிமையாளர்களின் சொத்துக்கள் இவர்களால் எழுதி வாங்கப்பட்டதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.

தற்போது சோதனை நடைபெற்று வரும் இரு கடைகளில் ஒரு கடை மட்டும் இது தொடர்பான புகாரில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கடையினரிடம் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் எவ்வளவு, எப்படி சேர்க்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக வருமான வரித்துறையினர் துருவித், துருவி விசாரித்தனர். நேற்று இரவு வரை விசாரணை தொடர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x