

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது நீதிமன்றத்தில் என்ஐஏ 680 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த ஆண்டு அக்.25-ம் தேதி ரவுடி கருக்கா வினோத், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கருக்கா வினோத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க பரிந்துரைத்தது. இதன்பேரில் கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் என்ஐஏவழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், கருக்கா வினோத்தை என்ஐஏ அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய இடத்தை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து பல்வேறு தடயங்களைச் சேகரித்தனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது, அங்கு பணியில் இருந்த காவலர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிந்து, 680 பக்ககுற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில், கருக்கா வினோத் மீது சட்டப்பிரிவு-124 சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.