Published : 21 Jan 2024 04:19 AM
Last Updated : 21 Jan 2024 04:19 AM
சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் இருந்து அவருடைய வருமான வரி பாக்கியை செலுத்த தடை கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நோக்கில் தமிழக அரசு அதை அரசுடமையாக்கி கடந்த 2020 ஜூலையில் அரசாணை பிறப்பித்தது. அப்போது இதற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.69 கோடி சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்பட்டது.
இந்த தொகையில் இருந்து ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கி ரூ.36.87 கோடியை பிடித்தம் செய்ய வருமான வரித் துறைக்கு தடை விதிக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவரான வசீகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘‘ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு ரூ.50.80 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளதால், நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு மக்களின் வரிப்பணத்தை ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கிக்காக செலவிடுவது நியாயமற்றது’’ என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, ‘‘வேதா நிலையம் இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்துவிட்டார். எனவே அரசு இதற்காக வைப்பீடாக செலுத்தியிருந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.70.40 கோடியாக அரசுக்கே திருப்பி செலுத்தப்பட்டு விட்டது’’ என்றார்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘இழப்பீடாக அரசு செலுத்தியிருந்த தொகை அரசுக்கே திருப்பி வழங்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல’’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT