

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 100 பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சட்டப் பேரவையில் 110-விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், ரூ.500 கோடிக்கு 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். மேலும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டத்துக்கென மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும் ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 ‘பிஎஸ் 6' பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு காலம் சீர்கெட்டிருந்த போக்குவரத்துத் துறையை சீரமைத்து, துறை உயிர்ப்போடு செயல்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் புதிய 100 பேருந்துகள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையும் கடந்த ஆட்சியில் உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. அதுவும் திமுக ஆட்சி காலத்தில்தான் சிறப்பாக பேசி முடிக்கப்பட்டது. குறிப்பாக ஊழியர்களின் கோரிக்கையான பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதோடு, 5 சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 20 சதவீதம் வழங்கப்பட்ட தீபாவளி போனஸ், கடந்த ஆட்சியில் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையும் மீண்டும் 20 சதவீதமாக முதல்வர் உயர்த்தி அறிவித்து, ஊழியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல், துறை சீரழிந்த நிலையில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கி அதற்கான தொகையை கழகங்களுக்கு வழங்கியதால் உரிய நேரத்தில் ஊழியர்கள் ஊதியம் பெறுகின்றனர்.
புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள்: இந்திய அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக போக்குவரத்துக் கழகங்கள்தான் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை வெளிக்காட்டும் விதமாகவே கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதுவரை 732 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் வாங்கப்படவுள்ள 2 ஆயிரம் பேருந்துகளும் விரைவில் வர இருக்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் புதிய டிசிசி பணியாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. இவ்வாறு புதிய பேருந்துகள், பணியாளர்கள் என முழுவீச்சில் போக்குவரத்துத் துறை செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 100 பேருந்துகளில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 40 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 40 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 10 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 5 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 5 பேருந்துகளும் வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூய்மையாக பராமரிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "1,666 ‘பிஎஸ் 6’பேருந்துகளில் முதல்கட்டமாக 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன். எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களை போன்று பொதுப் போக்குவரத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.