Published : 21 Jan 2024 10:27 AM
Last Updated : 21 Jan 2024 10:27 AM
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் மயானங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியை அணுகலாம் என்று ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவின் நிதிநிலை அறிவிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் தீவிரத் தூய்மைப் பணியின்கீழ், குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், பொது இடங்கள் மற்றும் அனைத்து மயான பூமிகளிலும் தீவிரத் தூய்மைப்பணிகளும், பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக அடையாறு மண்டலம், கஸ்தூரிபாய் நகர் ரயில்வே வாகன நிறுத்துமிடங்கள், மியாவாக்கி பூங்கா உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் நேற்று தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், 124-வது வார்டு, புனித மேரீஸ்கிறிஸ்தவக் கல்லறையில் குப்பை மற்றும் செடிகள்உள்ளிட்ட தோட்டக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் காலிமனைகளில் மாநகராட்சியின் சார்பில் தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்களும் இந்தத் தூய்மைப்பணிகளில் பங்கேற்று, பொது இடங்களில் பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் குப்பை கொட்டுதல், கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாநகராட்சியுடன் இணைந்து பொது இடங்கள் மற்றும் மயானங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள விரும்பும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டல சுகாதாரஅலுவலர்களைத் தொடர்பு கொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT