

சென்னை: சென்னையில் நடக்கும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டின் 2-வது நாளில் தமிழ்வழி மருத்துவ கல்வி, ரோபோடிக் சிகிச்சை உள்ளிட்ட 83 தலைப்புகளில் 95 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பேசினர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து “மருத்துவத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் கலைஞர் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 28 புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள், இந்தியா முழுவதும் இருந்து 150 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று தங்கள் மருத்துவ அனுபவத்தை பகிரிந்தனர். மாணவர்கள் உட்பட11,000 பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் தமிழகத்தின் சுகாதாரதிட்டங்கள், புற்றுநோய் பரிசோதனை, மேமோகிராம், விரைவான சுகாதார பரிசோதனை, பரந்த எல்இடி திரையில் பல்வேறு சுகாதாரகுறிப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தனித்தனி கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று மகப்பேறு மற்றும்மகளிர் மருத்துவம், தமிழ் வழி மருத்துவக் கல்வி, குழந்தை மருத்துவம், ரோபோடிக் அறுவை சிகிச்சையின் எதிர்காலம், புற்றுநோய், மனநல மருத்துவம், மருத்துவக் கல்விஉட்பட 83 தலைப்புகளில் 95 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பேசினர். அமெரிக்க நாட்டின் மருத்துவ வல்லுநர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கலந்துரையாடினார். அப்போது, தான் எழுதிய ‘கொரோனா: உடல் காத்தோம், உயிர் காத்தோம்’என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘கரோனா க்ரோனிக்கல்ஸ்’ மற்றும் ‘கம் லெட்ஸ் ரன்’ஆகிய புத்தகங்களை வழங்கினார்.
தொடர்ந்து மாநாட்டில் பொதுமக்களுக்கான அரங்குகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு இலவச மருத்துவ பரிசோதனைகள், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை ஆகியவற்றை சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பார்வையிட்டார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முத்து செல்வன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.