உலகம் உள்ள வரை ராமரை போல் உங்கள் புகழும் நிலைத்து நிற்கும்: பிரதமர் மோடியை வாழ்த்திய குஷ்புவின் மாமியார்

உலகம் உள்ள வரை ராமரை போல் உங்கள் புகழும் நிலைத்து நிற்கும்: பிரதமர் மோடியை வாழ்த்திய குஷ்புவின் மாமியார்
Updated on
1 min read

சென்னை: ‘உலகம் உள்ள வரை ராமரை போல் உங்கள் புகழும் நிலைத்து நிற்கும்’ என குஷ்புவின் 92 வயது மாமியார் பிரதமர் மோடியை வாழ்த்தினார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு. இவரது மாமியார் 92 வயதாகும் தெய்வானை சிதம்பரம் பிள்ளை. இவர் தீவிர ராமர் பக்தர் ஆவார். மேலும், பிரதமர் மோடியின் அதிதீவிர ரசிகையும் கூட. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு பிரதமரை சந்தித்து வாழ்த்து கூற வேண்டும். எனவே, மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா என நீண்ட நாட்களாக மருமகள் குஷ்புவிடம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் நடைபெற்ற நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமணத்துக்கு மோடி சென்றிருந்தபோது, அங்கு மோடியை சந்தித்த குஷ்பு, தனது மாமியாரின் ஆசையை மோடியிடம் தெரிவித்தார். அப்போது, மோடி, தமிழகம் வரும் போது தெய்வானையை கட்டாயம் சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர், நேற்று முன்தினம் சென்னை வந்தார். மோடி சென்னை வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பே குஷ்பு, பிரதமர் அலுவலகத்தில் மின்னஞ்சல் மூலம் மோடியை, நேருவிளையாட்டு அரங்கில் சந்திக்க அனுமதி கேட்டு வாங்கியிருந்தார்.

இதற்காக குஷ்பு, நேரு விளையாட்டு அரங்குக்கு நேற்று முன்தினம் தனதுமாமியார் தெய்வானை யுடன் வந்திருந்தார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்துவிட்டு, விளையாட்டு அரங்கில் உள்ள ஒரு அறையில், தெய்வானையை மோடி சந்தித்தார்.

அப்போது, மோடியின் கைகளை பற்றிக்கொண்ட தெய்வானை, ராமர் கோயில் கட்டியதற்கு அவரை பாராட்டினார். அதைகேட்டு மோடி, ராமர்கோயில் கட்ட தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பைதான் பாக்கியமாக கருதுவதாக தெய்வானையிடம் தெரிவித்தார். தொடர்ந்து, மோடியின் கைகளை பற்றிக்கொண்டே பேசிக்கொண்டிருந்த தெய்வானை, ‘ராமர் போல உங்கள் புகழ் இந்த உலகம்இருக்கும் வரை நிலைத்து நிற்கும்’ என வாழ்த்தினார்.

அப்போது, குலதெய்வ கோயிலில் இருந்து கொண்டு வந்த குங்குமத்தை மோடிக்கு கொடுத்தார். மோடி, தெய்வானை யின் கையாலேயே குங்குமத்தை வைத்துவிடும்படி கூறினார். இதையடுத்து, தெய்வானை குங்குமத்தை எடுத்து, மோடியின் நெற்றியில் வைத்துவிட்டு, தலையில் கைவைத்து ஆசி வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித் தது. அப்போது குஷ்புவும் உடன் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in