

திருச்சி: திருச்சியில் நேற்று பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக வந்த விவசாயிகள் 80 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று காலை திருச்சிக்கு வந்தார். இதையொட்டி, பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதலே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக் கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ம.ப.சின்ன துரை ஆகியோரை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, அவருக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக, போலீஸாரின் வீட்டுக் காவலை மீறி வெளியே வந்த அய்யாக் கண்ணு, தனது ஆதரவாளர்கள் 100 பேருடன், அண்ணாமலை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு, திருச்சி - கரூர் புறவழிச் சாலைக்கு வந்தார். அங்கு அவர்களை போலீஸார் தடுத்து, 80 பேரை கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அய்யாக் கண்ணு கூறியது: மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக வாக்குறுதி அளித்த படி விவசாயிகளுக்கு இரு மடங்கு லாபம் அளிக்கும் வகையில் விளை பொருட்களுக்கு விலை வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் சேர்க்க வேண்டும். காவிரியில் மேகே தாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.