Published : 20 Jan 2024 04:37 AM
Last Updated : 20 Jan 2024 04:37 AM

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை நிலைநிறுத்துவதே குறிக்கோள்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை நிலைநிறுத்துவதே குறிக்கோள்’ என்று கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கேலோ இந்தியா இளைஞர்விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளைத்தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எல்லார்க்கும் எல்லாம். அனைத்துத் துறை வளர்ச்சி. அனைத்து மாவட்ட வளர்ச்சி. அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டு வருகிறோம். தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவது நம் முடைய குறிக்கோளாகும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுசென்னை மாமல்லபுரத்தில் 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி, ஏடிபிசேலஞ்சர் டூர், சென்னை ஓப்பன் சேலஞ்சர், ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, ஸ்குவாஷ் உலக கோப்பை 2023, அலைச்சறுக்குப் போட்டி, கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதேநேரத்தில், விளையாட்டு கட்டமைப்புகளையும் உலகத் தரத்துக்கு உயர்த்திக் கொண்டு வருகிறோம்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை 24-ம் தேதி நான் திறந்துவைக்க உள்ளேன்.

மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள, அவர்களை சகோதர உணர்வோடு தமிழகத்துக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது தமிழக அரசு. அவர்களில் சிலர், இந்த கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்த முறை சேர்க்கப்பட்டிருக்கிறது. கேலோ இந்தியா 2023லோகோ-வில் வான்புகழ் வள்ளுவர்இடம் பெற்றிருக்கிறார். அந்தச் சிலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், திருவள்ளுவருக்கு இந்திய நாட்டின் தென்முனையில் வானுயர அமைக்கப்பட்டது. அதேபோல், ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் சின்னமும் அதில் இடம் பெற்றிருப்பது நமக்குக் கூடுதல் பெருமை.

சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, எல்லோருடைய நல்வாழ்வுக்கும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டுத் துறையிலும், தமிழகத்தை உலக அளவில் கவனம் ஈர்க்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசின் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. பல்வேறுமாநிலங்களில் இருந்து பங்கேற்றுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை வரவேற்று வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x