Published : 20 Jan 2024 05:02 AM
Last Updated : 20 Jan 2024 05:02 AM

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்: புதுப்பொலிவுடன் டிடி தமிழை தொடங்கினார் பிரதமர் மோடி

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 13-வது கேலோ இந்தியா போட்டி, ரூ.39 கோடியில் மேம்படுத்தப்பட்ட, 'டிடி தமிழ்' தொலைக்காட்சி என்ற புதுப்பொலிவு பெற்ற சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

13-வது கேலோ இந்தியா போட்டிகள் ஜன.19 தொடங்கி வரும் 31-ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. போட்டிக்கான சுடரை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் விளையாட்டுக்களின் வளர்ச்சியில் தமிழகத்துக்கென தனி இடம் உண்டு. இது சாம்பியன்களை உருவாக்கும் பூமி. எத்தனையோ விளையாட்டு வீரர்கள் இந்த மண்ணில் தோன்றியுள்ளனர். ஒவ்வொரு விளையாட்டிலும் செயற்கரிய செயலைச் செய்து காட்டியுள்ளனர். உலகளவில் சிறந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாக இந்தியாவை காண வேண்டும் என்று நினைக்கிறோம். இதற்காக தொடர்ந்து பெரிய பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை அதிகப்படுத்த வேண்டும்.

கேலோ இந்தியா போட்டிகளில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்குவாஷ், தமிழகத்தின் பழமையான கவுரவம் மற்றும் மரபு சார் விளையாட்டின் சின்னமான சிலம்பத்தை காண ஆர்வம் பெருகுகிறது. இந்த முறை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக வீரமங்கை வேலுநாச்சியார் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையைச் சேர்ந்த ஒருவர் சின்னமாக ஆக்கப்பட்டுள்ளது இதுவரை அறியப்படாத ஒன்றாகும்.

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பில் பதக்கங்கள் குவிக்கப்பட்டதோடு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் அரசு அவர்களுக்கு துணையாக இருந்தது. முந்தைய விளையாட்டுக்களின் வழிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, விளையாட்டு வீரர்களை செயல்பட வைத்தோம். விளையாட்டுக்கான ஒட்டுமொத்த அமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இப்போது, நமது பார்வை இந்தாண்டு பாரீஸ் நகரிலும், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜெல்சிலும் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் மீதே உள்ளது. நமது இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நேரடி அனுபவம் கிடைக்க வேண்டும். உலக விளையாட்டு சூழலமைப்பின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. எனவே 2029-ம் ஆண்டில், இளைஞர்களுக்கான ஒலிம்பிக்ஸ் மற்றும் 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

விளையாட்டுக்கள் மிகப்பெரிய பொருளாதாரமாகும். இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பல சாத்தியக் கூறுகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக ஆக்கும் உத்தரவாதத்தை நான் அளித்துள்ளேன். இதில், விளையாட்டு சார்ந்த பொருளாதாரத்தின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்பதே நமது முயற்சியாகும்.

நாட்டின் புதிய தேசிய கல்வித் திட்டத்தில் விளையாட்டுக்களை முக்கிய பாடத் திட்டத்தின் அங்கமாக ஆக்கியுள்ளளோம். இதன் காரணமாக விளையாட்டுகளை ஒரு வாழ்க்கைத் தொழிலாக தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு சிறு வயது முதலே வருகிறது. விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பிலும் இந்தியா தற்சார்புடையதாக மாற வேண்டும் என்பதே நமது முயற்சியாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுக்கள் தொடர்பான துறைகளில் தங்கள் எதிர்கால தொழில் பாதையை அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்துக்கு எனது உத்தரவாதம் உண்டு. நம்மால் தகர்க்க முடியாத எந்த ஒரு சாதனையும் கிடையாது. இந்தாண்டு நாம் புதிய சாதனைகளை ஏற்படுத்துவோம். நமக்காகவும், உலகுக்காகவும் புதிய வரையறைகளை நிர்ணயிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை அமைச்சர்கள் நிசித் பிரமாணிக், எல்.முருகன், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், மத்திய அரசின் பிரசார் பாரதி ஒளிபரப்பு நிறுவனம் சார்பில் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி ரூ.39 கோடியே 71 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு, ‘டிடி தமிழ்' எனும் பெயரில் நேற்று ஒளிபரப்பை தொடங்கியது.

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியின்போதே, 'டிடி தமிழ்' ஒளிபரப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டிய பிரதமர்: மேலும், 8 மாநிலங்களில் 12 ஆகாஷ்வாணி பண்பலை ஒலிபரப்பு நிலையங்கள், ஜம்மு- காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் அஞ்சல் ஒளிபரப்பு நிலையங்கள், 12 மாநிலங்களில் 26 பண்பலை ஒலிபரப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது, “இன்று தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணியின் பல்வேறு ஒளி, ஒலிபரப்புகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டியுள்ளேன். கடந்த 1975-ம் ஆண்டு ஒளிபரப்பை தொடங்கிய சென்னை தூர்தர்ஷன் இன்று புதிய பயணத்தை மேற்கொள்கிறது.

இன்று இங்கே 'டிடி தமிழ்' சேனல் புதிய வடிவம் பெற்றுள்ளது. 8 மாநிலங்களில் 12 புதிய பண்பலை ஒலிபரப்புகள் தொடங்கப்படுவதால், ஒன்றரை கோடி மக்களுக்கு பயன் கிடைக்கும். இன்று புதியதாக 26 பண்பலை ஒலிபரப்புக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, புதுப்பொலிவுடன் ‘டிடி தமிழ்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிறு வயதில் அனைவரும் விரும்பிய நிகழ்ச்சி ‘ஒலியும், ஒளியும்’.

ஆனால் காலப்போக்கில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அந்த ‘ஒலியும், ஒளியும்’ நிகழ்ச்சி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், குடும்ப நாடகங்களும் வரவுள்ளன என்று தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட, ‘டிடி தமிழ்' தொலைக்காட்சியில் புதிய தொடர்கள், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் செய்தி அறிக்கைகள், நிகழ்கால நிகழ்வுகள் தொடர்பான தலைப்புகளில் விவாத நிகழ்ச்சிகள், தினமும் திரைப்படங்கள் என ஒளிபரப்பப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x