

‘டிடி தமிழ்' தொலைக்காட்சி சேவை தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ‘புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள்’ என்ற முழக்கத்துடன் மத்திய அரசின் திட்டங்கள், கலாச்சார மற்றும் மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மக்களின் விருப்பம், நாட்டின் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் என அனைத்தும் சேர்ந்த கலவையாக ‘டிடி தமிழ்' ஒளிபரப்பாகும். மேலும், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சிகளும் அதில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதுதவிர நாட்டில் ஒளிபரப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் எல்லைப்புற கிராமங்களில் தொலைக்காட்சி, வானொலி சேவைகளை மேம்படுத்த முடியும்.
நாடு முழுவதும் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ எனும் பெயரில் 3 ஆயிரம் வாகனங்கள் மூலமாக யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 200 வாகனங்களில் கடந்த நவ.15-ம் தேதி இந்த யாத்திரை தொடங்கியது. தற்போது 10 ஆயிரம் கிராமங்களில் யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. வரும் ஜன.26-க்குள் இன்னும் 2 ஆயிரம் கிராமங்களில் இந்த யாத்திரையை மேற்கொண்டு திட்டமிட்ட இலக்கை நிறைவு செய்துவிடுவோம்.
இந்த யாத்திரை மூலம் மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக எடுத்து கூறுவதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின்போது ‘பிரசார் பாரதி’ தலைமை செயல் அதிகாரி கவுரவ் திவேதி, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய திட்டங்கள் தொடங்கப்பட்ட பிறகு, நாட்டின் பண்பலை அலைவரிசைகள் சென்றடைவது, நிலப்பரப்பில் 65 சதவீதமாகவும், மக்கள் தொகையில் 78 சதவீதமாகவும் அதிகரிக்கும். தூர்தர்ஷனில் உயர்சக்தி ஒளிபரப்பு அமைப்புகள் நிறுவப்படுவதன் மூலம் கூடுதலாக 1,848 சதுர கிமீ பரப்பளவுக்கும், கூடுதலாக 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கும் ஒளிபரப்பு சேவை சென்றடைய வழிவகுக்கும்.