அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2022 ஜூலை 11 அன்று சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவி வகிக்க தடை கோரியும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த இடைக்கால மனுக்களை நிராகரித்து தனி நீதிபதியும் மேல் முறையீட்டு வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியில் தொடருவதற்கும் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அத்துடன் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in