Published : 20 Jan 2024 06:43 AM
Last Updated : 20 Jan 2024 06:43 AM
திருச்சி/ராமநாதபுரம்/ராமேசுவரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளார். இதைெயாட்டி, ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக நேற்று வந்த பிரதமர் மோடிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்த பிரதமர், இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை 10.30மணிக்கு வரும் பிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் செல்கிறார். இதற்காக யாத்ரிநிவாஸ் எதிரே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பஞ்சக்கரை சாலை வழியாக காரில் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும் பிரதமர், காலை 11 மணியிலிருந்து 12.40 மணி வரை சுவாமி தரிசனம் செய்கிறார்.
சிறப்பு பாதுகாப்பு குழு: பின்னர், அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயணத்தில் பங்கேற்கும் பிரதமர், அங்கிருந்து காரில் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்று, பிற்பகல் 2.05 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் திருச்சியில் முகாமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யாத்ரி நிவாஸ் முதல் ஸ்ரீரங்கம் கோயில் வரை காவல் ஆணையர் என்.காமினி தலைமையில் 5 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. மேலும், கோயில் வளாகம்முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி, நேற்று மாலை 6 மணி முதல் இன்று பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை. கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரத்தில்... ஸ்ரீரங்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி,ராமேசுவரம் மாதா அமிர்தானந்தமயி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு இன்று பிற்பகல் 2.05 மணிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ராமநாத சுவாமி கோயிலுக்குச் செல்லும்பிரதமர், பகல் 2.45 மணிக்கு அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுகிறார்.
தொடர்ந்து, ராமேசுவரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கோயிலில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், இரவு ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.
நாளை (ஜன.21) காலை 8.55மணிக்கு ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்லும் பிரதமர், அங்குகாலை 9.30 முதல் 10 மணி வரை தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார். பின்னர், காலை 10.30 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். காலை 11.05 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் திரும்பி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, விமானம் மூலம்பிற்பகல் 12.35 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்றுநண்பகல் 12 மணி முதல் 2.30 மணிவரையிலும், நாளை காலை 6முதல் நண்பகல் 12 மணி வரையிலும் ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமிகோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மேலும், ராமேசுவரம் முழுவதும் ஜனவரி 20, 21-ம்தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT