டெங்கு காய்ச்சலுக்கு சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழப்பு @ பல்லடம்
திருப்பூர்: பல்லடம் அருகே ராயர்பாளையம் அபிராமி நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் திருக்குமரன். இவரது மகன் சரண் (23). தர்மபுரி அரசுசட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி காய்ச்சலால் சரண் பாதிக்கப்பட்டார். மருந்தகத்தில் இருந்து தன்னிச்சையாக மாத்திரைகள் வாங்கி, சாப்பிட்டதாக தெரிகிறது.
காய்ச்சல் அதிகரித்ததால், தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.பின், பொங்கல் விடுமுறைக்கு பல்லடம் வந்தார். அங்கு, உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதால், பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சரண், டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவரது உடலில் தட்டணுக்கள் குறைவாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து ராயர்பாளையம் பகுதியில் சுகாதாரப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறும்போது, ‘‘டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால், 5- 7 நாட்களுக்கு பிறகு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, தன்னிச்சையாக மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.
