Published : 13 Feb 2018 09:04 AM
Last Updated : 13 Feb 2018 09:04 AM

இயக்குநர் கே.பாலசந்தரின் சொத்துகள் அடமானம் வைக்கப்படவில்லை: கவிதாலயா தரப்பு விளக்கம்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் வீடு அடமானம் வைக்கப்படவில்லை என்றும், கடனை அடைப்பதற்கான வழிகளைச் செய்து வருவதாகவும் கவிதாலயா தரப்பு தெரிவித்துள்ளது.

இயக்குநர் கே.பாலசந்தரின் சொத்துக்களை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கப்பட்டதாகவும், கடனைத் திரும்பச் செலுத்தாததால் வீடு ஏலத்துக்கு வரவிருப்பதாகவும் திங்கட்கிழமை செய்திகள் உலவின.

இது குறித்து கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "கே.பி அவர்களின் வீடோ, அலுவலகமோ அடமானம் வைக்கப்படவில்லை. எல்லா வியாபாரத்தைப் போல எங்கள் வியாபாரத்துக்காகவும் நாங்கள் கடன் வாங்கியிருந்தோம். அதில் கணிசமான தொகை திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது. ஒரே தவணையில் முழு கடனையும் அடைப்பதற்கான வேலைகள், பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

யூகோ வங்கியின் சொத்து மேலாண்மைப் பிரிவின் சார்பாக கொடுக்கப்பட்ட ஏலத்துக்கான பொதுவான அறிவிப்பில் கே.பாலசந்தரின் இரண்டு சொத்துக்களும் சம்பிரதாய நடவடிக்கையாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விஷயம் சடப்பபூர்வமாக நடந்து வருவதால் இது குறித்து யூகோ வங்கி தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x