

சென்னை: சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு விற்பனையும் இந்த வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் ஒன்றும் இந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. மொத்தம் 30 ஏக்கர் பரப்பில் உள்ள இப்பகுதி 18 ஏக்கர் மற்றும் 12 ஏக்கர் என 2 பிரிவுகளாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி கலையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ரூ.50கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஏற்படுத்தும்’ என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், தீவுத்திடல் வளாகத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்சேகர்பாபு, வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதல் பெற்றுஅதன்பின் ஒப்பந்தம் கோரப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், சிஎம்டிஏ சார்பில் இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில், கீழ் 30 ஏக்கர் பரப்பிலான தீவுத்திடல் வளாகத்தின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ரூ.50 கோடியில் உலகத்தரத்தில் நகர்ப்புற பொதுசதுக்கம், கண்காட்சி கூடாரம், திறந்த வெளி திரையரங்கம் ஆகியவை முதல்கட்டமாக அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.