Published : 19 Jan 2024 08:56 AM
Last Updated : 19 Jan 2024 08:56 AM

ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் - பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி

படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பியோர் கடந்த 12-ம் தேதி இரவு முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பயணிக்கத் தொடங்கினர். இவர்களுக்காக 12,13,14 ஆகிய நாட்களில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன்படி, கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தமாக 11,284 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இவ்வாறு 3 நாட்களும் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக சென்னையில் இருந்து 6.54 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதே போல், ஆம்னி பேருந்துகள், ரயில்கள் வாயிலாக என மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்திருந்தனர். இவ்வாறு பயணித்தவர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே சென்னையை நோக்கி வரத் தொடங்கினர். இதனால் செங்கல்பட்டில் இருந்து போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பரனூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இவற்றோடு, நேற்று முன்தினம் இரவு தென்தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட பேருந்துகளும் சேர்ந்துகொள்ள, நேற்று அதிகாலை சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சோதனை முறை பயன்பாட்டில் இருந்த போதே தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில், விரைவு பேருந்துகளில் வருவோர் மின்சார ரயில்கள் மூலம் இருப்பிடங்களுக்குச் செல்ல விரும்புவோரை பொத்தேரியில் இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதே நேரம், இது தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அதிகமானோரால் பகிரப்பட்டு வந்தது. இதன் மூலம் விழிப்புணர்வு அடைந்தவர்கள், பொத்தேரியில் இறங்கினர். இவ்வாறு பல பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டதால் ரயில் நிலையத்தில் இருந்து வெகு தூரத்திலேயே பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால், பயணிகள் பெட்டிகளையும், குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் சிரமப்பட்டு நடந்து சென்றனர். இவ்வாறு நடந்து வந்து பொத்தேரி ரயில் நிலையத்தை அடைந்த போதும், அங்கு பயணச்சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அலுவலக நேரத்தில் மட்டுமே அங்கிருந்து அதிக ரயில்கள் இயக்கப்படுவதால், நீண்ட நேரம் காத்திருந்த பயணிகளால் ரயில் நிலையமும் நிரம்பி வழிந்தது. நடைமேடைக்கு ரயில்கள் வந்ததும் முண்டியடித்து இடம் பிடித்து பொதுமக்கள் பயணித்தனர். இவ்வாறு பொத்தேரியில் வாகனங்கள் அணிவகுத்ததால் கிளாம்பாக்கம் நோக்கி வந்த வாகனங்களும் நெரிசலில் சிக்கித் தவித்தன. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கே ஒன்றரை மணி நேரத்துக்கு மேலானதாக பயணிகள் தெரிவித்தனர்.

வெகு சிலரே கிளாம்பாக்கம் வந்து நகரின் பிற பகுதிகளுக்கு பயணித்தனர். அவர்களுக்கு போதிய நகர பேருந்துகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் கோயம்பேடு நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்துகள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை வழியாகவும், பெருங்களத்தூரில் இருந்து மதுர வாயல் பைபாஸ் சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இதனால் குரோம்பேட்டை, பல்லாவரம் செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

மேலும், கிளாம்பாக்கம், வண்டலூர் போன்ற பகுதிகளில் இறங்கி ஆட்டோ, கால் டாக்சி போன்றவற்றின் மூலம் நகருக்குள் செல்ல திட்டமிட்டிருந்தோருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நகரின் பிரதான பகுதிகளுக்குச் செல்ல குறைந்தபட்சம் ரூ.1,200 வசூலிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இவ்வாறு புறநகரிலேயே பெரும்பாலான நிறுத்தங்கள் முடிவு செய்யப்பட்டதால் கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமான நெரிசல் மட்டுமே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x