Published : 19 Jan 2024 08:17 AM
Last Updated : 19 Jan 2024 08:17 AM

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்: தில்லை கங்காநகர் அருகே பாலம் உடைந்து விபத்து

படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை திட்டத்தில், 500 மீட்டர் தொலைவு பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தில்லை கங்கா நகர் அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.

பாலம் விழுந்தபோது, அந்த இடத்தில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் போக்குவரத்து இருக்கிறது. தற்போது, எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதைப் பணி காரணமாக, சிந்தாரிப்பேட்டை – வேளச்சேரி இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப் படுகிறது. அதே நேரத்தில், கடற்கரை - வேளச்சேரி பாதையை நீட்டிக்கும் வகையில், வேளச்சேரி – பரங்கிமலை இடையே மூன்றாம் கட்ட திட்டப் பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது.

மொத்தமுள்ள 5 கி.மீட்டர் தொலைவில் 4.5 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை முடிக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 500 மீட்டர் பாதைப் பணி, நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட பிறகு, கடந்த ஆண்டில் இருந்து இந்த வழித்தடத்தில் பணிகள்வேகமெடுத்தன. இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை ரயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தியது.

தற்போது, 500 மீட்டர் பாதையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே இரு தூண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணியில் 4 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

முழு வீச்சில் சீரமைப்புப் பணி: இந்நிலையில், இரு தூண்களுக்கு இடையே இருந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று மாலை திடீரென உடைந்து விழுந்தது. அந்த நேரத்தில், அதன் கீழே பொதுமக்கள் யாரும் இல்லாததால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. பொதுவாக, பொது மக்கள் பலர் பொழுது போக்குக்காக, இந்தப் பகுதியில் அமர்ந்து இருப்பார்கள்.

நேற்று பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது, யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ஆதம்பாக்கம் போலீஸார் விரைந்து சென்றனர். அந்தப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து, சீரமைப்புப் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

உறுதித் தன்மையில் குறைபாடா?: வேளச்சேரி – பரங்கிமலை வரை மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில் 500 மீட்டர் பாலப் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. மார்ச் மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பாலத்தின் ஒரு பகுதி ( கர்டர் ) இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத்தின் உறுதித் தன்மையில் குறைபாடு காரணமாக, உடைந்து விழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x