

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் எழுதி யுள்ளனர்.
இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.வி.பத்மநாபன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
6 கோரிக்கைகளுக்கு தீர்வு: போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஒப்பந்தம் கையெழுத்தானபோது, ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வரு கிறது. எனவே, 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
கடந்த 5-ம் தேதி நடந்தபேச்சுவார்த்தையில் நிதித்துறைஒப்புதலுடன் அறிவிப்பதாக அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின்படி, ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு, போக்குவரத்து கழகங்களின் வரவு - செலவுக்கான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குதல், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.
தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் முன்பு நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங் களும் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில், அரசின் முடிவுதான் நியாயமான தீர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.