

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.2.97கோடி செலவில் குழந்தைகள் ஒப்புயர்வு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் ரூ.4.76 கோடி மதிப்பில் அதிநவீன உயிர்காக்கும் உயர்சிகிச்சை உபகரணம், 27 தாய்ப்பால் வங்கிகளுக்கு ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் 78 நவீன மருத்துவ உபகரணங்கள், சிசு இறப்புகளை மேலும் குறைக்க அங்கன்வாடி மையங்கள் மூலம்குழந்தைகள் நலனை அவர்களின்வீடுகளுக்கே சென்று கண்காணிக்க2,650 கிராம சுகாதார தன்னார்வலர்களுக்கும் 54,439 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் கையேடு வழங்கல் உள்ளிட்ட 6 திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, குழந்தைகள் இறப்பு விகிதம், ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளுக்கு 13 குழந்தைகள் என்ற அடிப்படை யில் இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்திய குழந்தை நல திட்டங்களினால், கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகள்இறப்பு விகிதம் படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தற்போது, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புவெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு, 8.2 என குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது.
இதனை மேலும் குறைக்கும் விதமாக பல்வேறு குழந்தைகள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியர் நலன், மருந்தகம், மறுவாழ்வு அறிவியல் மற்றும் அது சார்ந்த சுகாதார திட்டங்களை சர்வதேச மருத்துவ மாநாட்டில் ஆய்வு செய்வது மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்கள் வந்து மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் சர்வதேச மருத்துவ மாநாடு ஜன.19, 20, 21-ம் தேதிகளில் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 11 ஆயிரம் பிரதிநிதிகள், மருத்துவ பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த மாநாடுநடக்கிறது. இங்கு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.